Monday, April 27, 2009

உடல்....உயிர்...கடவுள்!

ஆனந்தம்... பரமானந்தம்!

உணவு விடுதிகளிலும் திருமணப் பந்திகளிலும் தங்களது இலையைப் பார்த்துச் சாப்பிடுவதைவிட, அடுத்தவர் இலையைப் பார்த்து சாப்பிடும் வேடிக்கையை, வேடிக்கை பார்த்திருக்கிறேன்! நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, பிறர் என்ன சாப்பிடுகின்றனர் என அறிவதில்தான் பலருக்கும் ஆர்வம்!

'இனிப்பு சாப்பிடாதீர்கள்... அதிகம் சதை போடும்' என்று குண்டான ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள். 'இனிப்பு சாப்பிட்டா சதை போடும் என்பதெல்லாம் உண்மையில்லை சார்! என் நண்பர் ஒருத்தர்... எவ்வளவு இனிப்பு சாப்பிடுவார் தெரியுமா? அவரு ஒல்லியாத்தான் இருக்காரு... இனிப்புக்கும் குண்டுக்கும் சம்பந்தமே இல்லை!' என்று அவசர அவசரமாக மறுப்பார். 'இன்னொருவர் சாப்பிடுகிறார். எனவே, நான் சாப்பிட்டால் என்ன?' என்று கேட்பதுதான் நம்மவர்களது வாதம்!

இது, பிழையான அணுகுமுறை. ஒருவருக்கு எது அமுதோ, அது மற்றவருக்கு விஷமாகவும் முடியும். மற்றவருக்கு எது விஷமோ, அது இன்னொருவருக்கு அமுதமாக இருக்கும். இன்னொரு விஷயம்... அளவு மாறினாலும் அமுதம் விஷமா கும்; விஷம் அமுதாகும்!


உடம்பின் சூட்சுமத் தன்மை மனிதருக்கு மனிதர் வேறுபடும். நம் உடம்பின் இயங்கும் தன்மை என்ன என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். சிலரது உடல்வாகு, உள்ளே செல்லும் உணவின் தன்மையை அதிகம் உள்வாங்காது.

அப்படியே வெளியே தள்ளி விடும். சிலருக்கு... கொஞ்சம் சாப்பிட்டாலும், அனைத்தும் தோலுக்கு அடியில் சதைத் திரட்சியாக அடுக்கடுக்காக ஒளித்து வைக்கப்படும். பணத்தைச் சுருட்டி சுவிஸ் வங்கியில் ஒளித்து வைப்பது போல, சிலரது உடம்பு சுருட்டி சுருட்டி உடல் வங்கியில் ஒளித்து வைத்துக் கொள்ளும்! சிலரின் உடம்பு, எரித்துப் பொசுக்கி விடும்; சதை விழாது. எனவே, நம் உடலின் இயல்பு என்ன என்பது கண்டறிவதே முதல் வேலை. நமது வேலைப் பளு மற்றும் வேலையின் இயல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப சாப்பிடுவது இரண்டாவது கடமை.

வயிறு வளர்த்தவர்களை, 'போலீஸ்கார தொந்தி' என கேலி செய்கிறோம். அதிக நேரம் நின்றபடியே வேலை செய்பவர்கள், சாதாரணமாகச் சாப்பிட்டா லும் வயிறு முன் தள்ளிவிடும். அதிக நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்தாலும் இடுப்பைச் சுற்றி வட்டம், மாவட்டம் என்று சதை தடித்து விடும் வாய்ப்பு உண்டு. எனவே, வேளைக்கு ஏற்ற சாப்பாடு; வேலைக்கு ஏற்ற சாப்பாடு& ஆகிய இரண்டுமே கவனிக்கத் தக்கது.

மூன்றாவதாக... பிடித்ததைச் சாப்பிடுவது. ருசி அதிகமாக இருந்தால், கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவதையும் இலவசமாகவோ அல்லது பிறர் செலவில் கிடைக்கிறது எனில், பரிமாறுபவரே பயப்படும்படி சாப்பிடுவதையும் அறவே நிறுத்த வேண்டும். 'அற்றால் அளவறிந் துண்க' எனும் குறள் நெறியை மந்திரமாக ஏற்று செயல்பட வேண்டும்.

காட்டில், மிருகக்காட்சிசாலையில்... பசி இல்லா மல் சாப்பிடும் மிருகம் ஒன்றைக்கூட நீங்கள் பார்க்க

முடியாது. மிருகங்கள், பசி இல்லையெனில் உணவைத் தொடவே தொடாது. பசியே இல்லாமல் சாப்பிடும் அதிசய பிராணி மனிதன் மட்டுமே!

சாப்பிடுவதற்கு முன் ஒரு விஷயம்...

1. இதை அவசியம் சாப்பிட வேண்டுமா?
2. இப்போது சாப்பிட வேண்டுமா?
3. இவ்வளவு சாப்பிட வேண்டுமா?
4. இப்படி & இந்தப் பக்குவத்தில்தான் சாப்பிட வேண்டுமா?

_ இந்த நான்கு கேள்விகளுக்கும் 'ஆம்' என்று பதில் தந்து விட்டு சாப்பிடுபவர்களை மந்தம், மன வருத்தம், மருத்துவம், மயானம் (மரணம்) ஆகிய நான்கும் நெருங்குவதே இல்லை.

சரியான உணவைத்தான் சாப்பிடுகிறோம் என்பதற்கான அளவுகோல் எது? எந்த உணவை

சாப்பிட்ட பிறகும் அதிக வேலை பார்க்கும் ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் அடைகிறீர் களோ... அந்த உணவே உங்களுக்கான உணவு! சாப்பிட்ட களைப்பு இன்றி கூடுதலாக பணியாற்ற முடிந்தால், அதுவே சரியான உணவு.

எல்லோருக்கும் ஏற்ற, சரியான... ஒரே உணவு

என்று எதையுமே சொல்ல முடியாது. ஒருவருக்கு

ஒத்துக்கொள்ளும் உணவு, பிறருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, தனக்கு உகந்த உணவு என்ன என்பதை அறிந்து கொள்வதே நமது முதல் கடமை! உடனே நீங்கள், 'அச்சச்சோ... சுவையே இல்லாமல் சாப்பிடச் சொல்கிறானே...' என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ருசி என்பது முக்கியம்; மறுப்பதற்கு இல்லை.

ரசிகமணி டி.கே.சி. ஒருமுறை டெல்லி சென்றிருந் தார். அந்தக் காலத்தில் வடக்கே அரிசி கிடைப்பது மிகவும் கடினம். ஆகவே பகலிலும் இரவிலும் சப்பாத்தியே அவருக்குத் தரப்பட்டது. பிறகு அவர் தமிழகம் திரும்பியதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சப்பாத்தி

குறித்து இப்படி கிண்டலாகச் சொன்னாராம்: ''அதென்னய்யா உணவு... சப்பாத்தி தயாரிக்கவும் ரெண்டு கை தேவை; பிய்த்துத் தின்னவும் ரெண்டு கை தேவை!''

உடனே பத்திரிகை ஆசிரியர், ''அதுக்கு ஒரு சப்ஜி தருவார்களே... உருளைக்கிழங்கு மசாலா... அதைத் தொட்டு சாப்பிட்டால், கஷ்டம் இருந்திருக்காதே'' என்றார்.

உடனே டி.கே.சி., ''உருளைக்கிழங்கு சப்ஜியோட தான் சாப்பிடணும்னா சப்பாத்தி என்ன உசத்தி?

உங்க நியூஸ் பேப்பரையே திங்கலாமே?! சொந்த பலத்தில் சப்பாத்தியால நிக்க முடியுமா? மெத்து மெத்துன்னு பஞ்சு மாதிரி இருக்கிற இட்லிக்குப் பக்கத்துல நெருங்கக்கூட முடியாது சப்பாத்தியால'' என்று பதிலடி கொடுத்தாராம்!

நீண்ட காலம் பழகிவிட்டதாலேயே உணவுப் பழக்கத்தில் நம்மால் மாற்றங்களைக் கொண்டு வர

முடிவதில்லை. ஆனால், ஆரோக்கியம் மற்றும் ஆனந்தம் குறித்து அக்கறை இருந்தால், மாற்றங் களைத் தாராளமாகக் கொண்டு வர முடியும்.

அரபுக் கதை ஒன்று: கண்ணில்லாத ஒருவர் தடியை ஊன்றியபடி, பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டார். இவர் மீது கருணை கொண்ட ஒருவர், பயணத்தில் உதவியபடி வந்தார்.

அது குளிர்காலம்! பனி மழை பெய்தது. இருவரும் அங்கிருந்த பழைய சத்திரம் ஒன்றில் தங்கினர். அதிகாலையில் பார்வையற்றவர் எழுந்து, தனது கைத்தடியை தேடினார். நாலாபுறமும் துழாவிய போது, வளைந்தும் நெளிந்துமாக வழுவழுப்பான தடி ஒன்று கையில் அகப்பட்டது.

வேலைப்பாடு மிக்க கைத்தடி ஒன்று கிடைத்து விட்டதாக பார்வையற்றவர் மகிழ்ந்தார். உடன் வந்தவர், அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை, தடியால் தட்டி எழுப்பினார் பார்வையற்றவர். உறக்கத்தில் இருந்து கண் விழித்தவர், பார்வையற்றவரின் கையில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். அவர் கையில் இருந்தது தடியல்ல... பாம்பு. குளிரில் விறைத்து மரக் கட்டை போல் கிடந்தது அது!

பார்வையற்றவரோ... பாம்பைக் கைத்தடி என நினைத்து, அதை சந்தோஷத்துடன் தடவிக் கொண்டே இருந்தார். உடன் வந்த ஆசாமி பதறிப் போய், ''முதல்ல அந்த சனியனை

தூக்கி எறி. அது தடியல்ல... பாம்பு'' என்று அலறினார். உடனே பார்வையற்ற மனிதர், ''ஏன் இப்படி பொய் சொல்றே? அழகான தடி எனக்குக் கிடைச்சிருச்சுன்னு உனக்குப் பொறாமை. நான் தூக்கி எறிஞ்சதும் நீ எடுத்துக்கலாம்னு நினைக்கறே?'' என்றாராம்.

உடன் வந்த ஆசாமி தலையில் அடித்துக் கொண்டார். ''உளறாதே... இது கொடிய விஷம் கொண்ட பாம்புதான். குளிர்ல விறைச்சுப் போய் வெறும் கட்டை யாகிக் கிடக்குது. கொஞ்ச நேரத்துல உணர்வு வந்ததும் உன்னைக் கடிச்சிரும்'' என்று அவர் சொல்ல... அவரின் நட்பையே முறித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் பார்வையற்ற ஆசாமி. சிறிது நேரத்தில் விடிந்தது; சூரியன் உதித்தது. வெயில் சூடு பட்டு, உணர்வு திரும்பி இயல்பு நிலைக்கு வந்தது பாம்பு. தம்மை வருடிக் கொடுத்து, ஆனந்தப்பட்ட அந்த பார்வையற் றவரை எமலோகத்துக்கு அனுப்பியது.

இந்தக் கதையின் தத்துவம் என்ன? நமது பழக்கங்

களே பாம்பு. அந்த விழியற்றவர்தான் நாம்! வழிகாட்டி உதவியவர், விழிப்புற்றிருக்கும் ஞானி.

நமது பழக்கங்களை விடச் சொல்கின்றனர் ஞானிகள். தூக்கி எறியுங்கள் என்று அறிவுறுத்து கின்றனர். ஆனால், அதை ஏற்காமல், அவர்களையே எதிரிகளாக

எண்ணுகிறோம்; எமலோகம் போகிறோம். இந்த அசட்டுத்தனம் ஏன்? விழிப்புற்றவர்களின் வழி காட்டுதலை ஏற்கலாமே?

பழம்பெருமை பேசும் பலரும், 'ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி; மூன்று வேளை உண்பவன் ரோகி; நான்கு வேளை உண்பவன் துரோகி' என்று வசனம் பேசுவர். ஆனால்,

ஒரே வேளையில் நிறைய்ய சாப்பிடும் நமது உணவு முறையே தவறானது

என்பதே என் வாதம்! உலகில் சர்க்கரை நோயின் தலைமைச் செயலகமாக இந்தியா மாறியிருப்பதற்கு மூல காரணமே இதுதான்! திட உணவு, திரவ உணவு, முளை கட்டிய பயறு முதலான உணவை கொஞ்சமாக, ஆறு வேளைகளாகப் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிற உணவுத் திட்டம் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். போகிற இடத்தில் எல்லாம் கொடுக்கிறார்களே என்று சாப்பிட்டால், ஆபத்துதான்!

உடல் என்பது விலைமதிப்பற்ற கருவி! அது நமது சத்ருவும் அல்ல... மித்ருவும் அல்ல! அது ஒரு ஒழுங்குத் திட்டம். அதை நாசப்படுத்துவது நல்லதல்ல. உடல் மீது இரக்கம் கொள்ளுங்கள்; அதைச் சங்கடப்படுத்தாதீர்கள். பிறரிடம் அன்பு காட்டுவது

எவ்வளவு அவசியமோ, அதுபோன்று நம் மீது நாமே அன்பு காட்டுவதும் அவசியம்!

உணவைக் கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல உடம்பு; புதைகுழியும் அல்ல; பரமாத்மாவின் புனிதமான இறை இல்லம். எனவே, உடலை நேசியுங்கள்... முடிந்தால் பூசியுங்கள்!

1 comment:

N.Ganeshan said...

A very good article.