Wednesday, September 24, 2008

Adhi Sankarar's Answers to common Question.

ஸ்தோத்திரங்கள், உரை நூல்கள், வேதாந்த விளக்கங்கள் என்று பல்வேறு நூல்களை அருளிய ஆதி சங்கரர், நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல கருத்துகளை பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கேள்வி - பதில் பாணியில் அற்புதமாகத் தந்துள்ளார். அதன் பெயர் பிரச்னோத்ர ரத்னமாலிகா (வினா-விடை மணிமாலை). எவ்வளவு பெரிய விஷயங்களை எத்தனை எளிமையாகச் சொல்கிறார் ஆசார்யாள்! எல்லாம் சர்க்கரைப் பந்தல்.

சமஸ்கிருதத்தில் சங்கரர் அருளிய அந்த பிரச்னோத்ர ரத்னமாலிகாவைப் பலர் தமிழாக்கம் செய்திருந்தாலும் இலக்கியச் செம்மல் பேராசிரியர் கே.எஸ்.நாகராஜன் (முன்னாள் முதல்வர், டி.பி.ஜெயின் கல்லூரி), அற்புதமாக அந்தப் பணியைச் செய்திருக்கிறார். (யோக கே்ஷமா டிரஸ்ட் வெளியீடு)

மெத்தப் படித்தவர்களுக்குப் புரியும்படிதானே ஆசார்யாள் பெரிய பெரிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்? பாமர ஜனங்களுக்குப் புரியும்படி எதுவும் சொல்லவில்லையே? என்று ஏங்குபவர்களுக்கு விடைதான், இந்த பிரச்னோத்ர ரத்னமாலிகா.

இந்தக் கேள்வி-பதில்களைப் படித்து, மனனம் செய்து, அதன்படி நடக்கிறவர்கள் சாதுக்களிடையே சிறந்து விளங்கி ரத்னங்கள் போல உலகில் திகழ்வார்கள் என்று கூறுபவர் யார் தெரியுமா? ஜகத்குரு ஆதிசங்கரர்தான்.

இதோ அந்த அபூர்வமான பிரச்னோத்ர ரத்னமாலிகா.

கேள்வி: ஐயா, பெரியவரே, ஏற்றுக்கொள்ளத் தக்கது எது?

பதில்: குருவின் சொல்.

கேள்வி: செய்யத்தகாத காரியம் எது?

பதில்: பலராலும் நிந்திக்கத் தக்க செயல்.

கேள்வி: குரு என்பவர் யார்?

பதில்: தத்துவத்தை அறிந்து, சீடனின் நன்மையிலேயே எப்போதும் நாட்டம் கொண்டவரே குரு ஆவார்.

கேள்வி: நல்ல வித்வானாக உள்ளவன் விரைந்து செய்ய வேண்டியது எது?

பதில்: பிறப்பு_இறப்பு என்னும் பந்தம் தொடராமல் அறுத்துவிடுவது.

கேள்வி: மோட்சமாகிய மரத்துக்கு விதை எது?

பதில்: கர்மாக்களால் உண்டான நல்ல உண்மையான அறிவு.

கேள்வி: உலகில் ஆத்மாவுக்கு மிகவும் நல்லது எது?

பதில்: தர்மம்.

கேள்வி: இவ்வுலகில் புனிதமானவன் யார்?

பதில்: மனம் தூய்மையாக உள்ளவன்.

கேள்வி: எவன் உண்மையான (புலவன்) பண்டிதன்?

பதில்: நல்லது, கெட்டது என்று பிரித்தறியும் விவேகம் உடையவன்.

கேள்வி: எது விஷம் போன்றது?

பதில்: தனது குருவினிடத்தில் காட்டும் அவமரியாதை.

கேள்வி: இவ்வுலகில் சாரமானது எது? மனிதர் அனைவராலும் விரும்பத்தக்கது எது?

பதில்: தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் நாட்டம் கொண்ட பிறவியே.

கேள்வி: கள்ளைப்போல் மனத்துக்கு ஆசையை உண்டாக்குவது எது?

பதில்: நட்பு.

கேள்வி: திருடர்கள் யார்?

பதில்: சிற்றின்ப சுகங்கள்.

கேள்வி: ஸம்ஸாரத்தில் நம்மை சிக்க வைக்கும் கொடி எது?

பதில்: ஆசை.

கேள்வி: நம்முடைய உண்மையான பகைவன் யார்?

பதில்: முயற்சியின்மை.

கேள்வி: நமக்கு பயத்தை அளிக்கக் கூடியது எது?

பதில்: மரணம்.

கேள்வி: குருடனுக்குச் சமமானவன் யார்?

பதில்: ஆசை அதிகம் கொண்டவன்.

கேள்வி: எவன் உண்மை வீரன்?

பதில்: பெண்களின் கடைக்கண் பார்வைகளால் தாக்கப்படாதவன்.

கேள்வி: அமுதம்போல், காதுகளால் விரும்பிப் பருகக் கூடியது எது?

பதில்: சாதுக்களுடைய உபதேசம்.

கேள்வி: கௌரவம் பெற வழி எது?

பதில்: பிறரிடம் சென்று உதவி கோராமல் இருத்தலே.

கேள்வி: புரிந்துகொள்ள முடியாதது எது?

பதில்: பெண் மனம்.

கேள்வி: எவன் புத்திசாலி?

பதில்: பெண்களின் நடத்தையினால் பாதிக்கப்படாதவன்.

கேள்வி: எது மிக்க துயரத்தைத் தரும்?

பதில்: போதுமென்ற மனம் இல்லாமை.

கேள்வி: எது அற்பமான செயல்?

பதில்: கீழ்குணமுடையவனிடம் உதவி கோருதல்.

கேள்வி: எது உண்மையான வாழ்வு?

பதில்: குற்றமற்ற வாழ்க்கை.

கேள்வி: ஜடப்பொருளின் தன்மை எது?

பதில்: படித்துவிட்டு, அதைப் பயிற்சி செய்யாமல் இருத்தல்.

கேள்வி: விழிப்புடன் இருப்பவன் யார்?

பதில்: விவேகம் உடையவன்.

கேள்வி: மனிதர்களுக்குத் தூக்கம் என்பது எது?

பதில்: மடமை, மூடத்தனம்.

கேள்வி: தாமரை இலைமேல் நீர்போல் நிலையற்றது எது?

பதில்: இளமை, செல்வம், ஆயுள் ஆகிய மூன்றும்.

கேள்வி: சந்திரனின் நிழல் போல் குளிர்ந்து இருப்பவர் யார்?

பதில்: சாதுக்கள்.

கேள்வி: நரகம் என்பது எது?

பதில்: அடிமைத்தனம்.

கேள்வி: எது உண்மையான சுகத்தைத் தரவல்லது?

பதில்: எல்லாவிதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல்.

கேள்வி: எது ஸத்யம், உண்மை?

பதில்: உயிர்களிடத்து அன்பு.

கேள்வி: உலகில் உயிரினங்களுக்கு மிகப் பிரியமானது எது?

பதில்: அவ்வவற்றின் உயிரே.

கேள்வி: துன்பத்தை விளைவிக்கக் கூடியது எது?

பதில்: சினம் (கோபம்).

கேள்வி: இன்பத்தைத் தரவல்லது எது?

பதில்: சான்றோர் நட்பு.

கேள்வி: எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன் யார்?

பதில்: அனைத்தையும் துறந்தவன்.

கேள்வி: விலைமதிக்க முடியாதது எது?

பதில்: காலத்தாற் செய்த உதவி.

கேள்வி: இறக்கும்வரை ஓயாமல் துன்பம் தரவல்லது எது?

பதில்: நாம் செய்துவிட்டு மறைத்து வைத்திருக்கும் பாவச் செயல்.

கேள்வி: எந்தச் செயல்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

பதில்: கல்வி கற்பதிலும், மருந்து உண்பதிலும், தானம் கொடுப்பதிலும்.

கேள்வி: எவற்றில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும்?

பதில்: தீயவர், அயல் பெண்கள், பிறர் சொத்து ஆகியவற்றில்.

கேள்வி: இரவும் பகலும் நாம் சிந்திக்க வேண்டியது எதை?

பதில்: உலகின் நிலையற்ற தன்மையை.

கேள்வி: நாம் அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை?

பதில்: ஏழை எளியவர்களிடம் கருணை, சாதுக்களின் நட்பு.

கேள்வி: யார் யாருடைய ஆத்மாக்களை இறக்குந் தருணத்திலும் தூய்மைப்படுத்த முடியாது?

பதில்: மூடன், சந்தேகப் பிராணி, நிம்மதியற்றவன், செய்நன்றி கொன்றவன் ஆகியோருடைய ஆத்மாக்களை.

கேள்வி: சாது என்பவன் யார்?

பதில்: நன்னடத்தை உடையவன்.

கேள்வி: எவனைத் தாழ்ந்தவன் என்கிறோம்?

பதில்: கெட்ட நடத்தை கொண்டவனை.

கேள்வி: இவ்வுலகை வென்றவன் யார்?

பதில்: சத்யமும் பொறுமையும் கொண்டவன்.

கேள்வி: தேவர்களும் வணங்கும் தகுதி பெற்றவன் யார்?

பதில்: கருணை உள்ளம் படைத்தவன்.

கேள்வி: மனிதனுக்கு எதனால் உண்மையான விழிப்பு உண்டாகும்?

பதில்: ஸம்ஸாரமாகிய பெரிய காட்டைப் பார்த்த பிறகு.

கேள்வி: உயிரினங்களை எவன் எளிதாகத் தன் வசப்படுத்த முடியும்?

பதில்: உண்மை பேசுபவனாகவும், அன்பும், நல்லடக்கமும் உடையவனாகவும் இருப்பவன்
.
கேள்வி: எவ்வழியை நாம் பின்பற்ற வேண்டும்?

பதில்: இம்மை_மறுமை இரண்டிலும் நீடித்த சுகத்தை அளிக்கும் நேர்மை வழியை.

கேள்வி: குருடன் யார்?

பதில்: தகாத செயல்களில் ஈடுபடுபவன்.

கேள்வி: செவிடன் யார்?

பதில்: நல்லவற்றைக் கேளாதவன்.

கேள்வி: ஊமை யார்?

பதில்: தக்க தருணத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்.

கேள்வி: தானம் என்பது எது?

பதில்: பெற்றுக்கொள்பவன் கேளாமலும், பிரதிபலன் எதிர்பாராமலும் கொடுப்பது.

கேள்வி: உண்மையான நண்பன் யார்?

பதில்: பாவச் செயல்களிலிருந்து நம்மை விலக்குபவன்.

கேள்வி: மனிதனுக்கு அணிகலன் யாது?

பதில்: அவனுடைய குணம்.

கேள்வி: சொல்லுக்கு அணி செய்வது எது?

பதில்: வாய்மை.

கேள்வி: மின்னல் ஒளிபோல் தோன்றி கணத்தில் மறைவது எது?

பதில்: தீயோர் நட்பு.

கேள்வி: குலத்தையும் குணத்தையும் காப்பவர் யார்?

பதில்: சாதுக்களே.

கேள்வி: இவ்வுலகில் சிந்தாமணியைப்போல் கிடைத்தற்கரியது எது?

பதில்: ஞானிகள் நான்கு பொருட்களைச் சிந்தாமணி போன்றவை என்பர்.

கேள்வி: அவை யாவை?

பதில்: அன்புடன் அளிக்கப்பட்ட தானம், ஆணவம் இல்லாத அறிவு, அமைதி பொருந்திய வீரம், தியாக உள்ளம் படைத்தோர் செல்வம்.

கேள்வி: வருந்தத்தக்க குணம் எது?

பதில்: செல்வம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாமை.

கேள்வி: சிறந்த குணம் எது?

பதில்: வள்ளல் தன்மை.

கேள்வி: நல்ல புலவர்களால் எவன் மதிக்கப்படுவான்?

பதில்: இயற்கையாகவே தன்னடக்கம் உடையவன்.

கேள்வி: குலத்தின் பெருமையை உயர்த்துபவன் யார்?

பதில்: எல்லா நற்குணங்களும் நிறைந்திருந்தும், தன்னடக்கத்துடன் திகழ்பவன்.

கேள்வி: இவ்வுலகம் யாருக்கு வயப்படுகிறது?

பதில்: இனிய, நன்மை பயக்கக்கூடிய சொற்களை உடையவனாய், எப்போதும் அறவழியில் செல்பவனுக்கு.

கேள்வி: நல்ல புலவரின் மனத்தைக் கவர்பவை எவை?

பதில்: நல்ல கவிதையும், அறிவு நிரம்பிய பெண்ணும்.

கேள்வி: விபத்துகள் யாரை நெருங்குவதில்லை?

பதில்: முதியோர் சொற்படி நடக்கும் அறிவாளியை.

கேள்வி: செல்வத்தின் கடவுளான லட்சுமி யாரை விரும்புகிறாள்?

பதில்: சோம்பலின்றி உழைப்பவனையும், நேர்மையான நெறியில் நடப்பவனையும்.

கேள்வி: லட்சுமி யாரை விட்டு திடீரென்று விலகுகிறாள்?

பதில்: குரு, தேவர்கள் ஆகியோரை நிந்திப்பவனையும், சோம்பல் குணம் உள்ளவனையும்.

கேள்வி: நாம் எங்கு வசிக்க வேண்டும்?

பதில்: சாதுக்கள் மத்தியில் அல்லது காசியில்.

கேள்வி: எந்த இடங்களை நாம் விலக்க வேண்டும்?

பதில்: கஞ்சர்கள் வாழும் இடத்தையும், பேராசை கொண்ட அரசனின் நாட்டையும்.

கேள்வி: துன்பத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றக் கூடியவை எவை?

பதில்: கடமையுணர்ச்சி கொண்ட மனைவியும், தைரியமும்.

கேள்வி: பரிதாபத்துக்கு உரியவன் யார்?

பதில்: வசதி இருந்தும் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவன்.

கேள்வி: ஒருவன் அற்பனாக ஆவதற்குக் காரணம் என்ன?

பதில்: தகுதி அற்றவர்களிடம் யாசிப்பதுதான்.

கேள்வி: ராமபிரானைவிட சூரன் யார்?

பதில்: காமனுடைய அம்புக்கு இலக்கு ஆகாதவன்.

கேள்வி: இரவும் பகலும் நம் சிந்தனைக்கு உரியது எது?

பதில்: இறைவனின் திருவடி.

கேள்வி: கண்கள் இருந்தும் குருடர்கள் யார்?

பதில்: நாஸ்திகர்கள்.

கேள்வி: எவனை நாம் முடவன் என்று கூறலாம்?

பதில்: முதுமையில் தீர்த்த யாத்திரை செல்பவனை.

கேள்வி: எந்தத் தீர்த்தத்தை முக்கியமானதாகக் கருதலாம்?

பதில்: மனத்து அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்படுத்துவதே சிறந்த தீர்த்தம்.

கேள்வி: மக்கள் எப்போதும் நினைக்க வேண்டியது எதை?

பதில்: விஷ்ணுவின் நாமாவை.

கேள்வி: புத்திசாலியான ஒருவன் எவற்றைச் சொல்லக்கூடாது?

பதில்: பிறர் குற்றங்களையும் பொய்யையும்.

கேள்வி: மனிதர்கள் தேடிப் பெறவேண்டியவை யாவை?

பதில்: கல்வி, பணம், வலிமை, புகழ், புண்ணியம்.

கேள்வி: மனிதனின் நல்ல குணங்கள் யாவற்றையும் அழிக்க வல்லது எது?

பதில்: பேராசை.

கேள்வி: நமது பலமான பகை எது?

பதில்: காமம், ஆசை.

கேள்வி: எந்த அரச சபையை நாம் விலக்க வேண்டும்?

பதில்: அனுபவமும் முதிர்ந்த வயதுமுடைய அமைச்சர்கள் இல்லாத சபையை.

கேள்வி: இவ்வுலகில் மனிதன் எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?

பதில்: அரசாங்க ஊழியத்தில்.

கேள்வி: உயிரைக்காட்டிலும் அதிகமாக விரும்பத்தக்கவை எவை?

பதில்: குலதர்மமும், சாதுக்களின் சகவாசமும்.

கேள்வி: கவனமாக காப்பாற்றப்பட வேண்டியவை யாவை?

பதில்: புகழ், பதிவிரதையான மனைவி, சுய புத்தி.

கேள்வி: கற்பகத் தரு போன்றது எது?

பதில்: நல்ல மாணவனுக்குக் கற்பிக்கப்படுகிற கல்வி.

கேள்வி: அழியாத ஆலமரம் போன்றது எது?

பதில்: முறைப்படி, பாத்திரம் அறிந்து, அளிக்கப்பட்ட உதவி.

கேள்வி: அனைவருக்கும் ஆயுதம் போன்றது எது?

பதில்: யுக்தி, சமயோசித புத்தி.

கேள்வி: தாய் எனக் கருதத்தக்கது எது?

பதில்: பசு.

கேள்வி: மனிதனுக்கு வலிமை எது?

பதில்: தைரியம்.

கேள்வி: மரணம் என்பது எது?

பதில்: கவனக்குறைவு.

கேள்வி: விஷம் எங்கு உள்ளது?

பதில்: தீயவர்களிடத்தில்.

கேள்வி: தீண்டத்தகாதது அல்லது தவிர்க்க வேண்டியது எது?

பதில்: கடன்.

கேள்வி: மனிதன் எப்பாடுபட்டேனும் பெற வேண்டியது எது?

பதில்: ஹரிபக்தி.

கேள்வி: மகாபாதகச் செயல் எது?

பதில்: மற்றவர்களைத் துன்புறுத்துதல்.

கேள்வி: எவன் கடவுளுக்குப் பிரியமானவன்?

பதில்: தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்.

கேள்வி: காரிய சித்தி எதனால் உண்டாகும்?

பதில்: தவத்தினால்.

கேள்வி: புத்தி எவரிடத்தில் உள்ளது?

பதில்: அறவோர் இடத்தில்.

கேள்வி: புத்தி எப்படிக் கிடைக்கும்?

பதில்: முதியோர்களை உபசரித்துப் பணிவிடை செய்வதால்.

கேள்வி: முதியவர் யார்?

பதில்: தர்மத்தின் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள்.

கேள்வி: மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது எது?

பதில்: கெட்ட பெயர்.

கேள்வி: எவன் சுகமாக வாழ்கிறான்?

பதில்: செல்வம் உடையவன்.

கேள்வி: செல்வம் என்பது யாது?

பதில்: எது நமக்குப் பிரியமானதோ, அதுவே நமக்குச் செல்வம்.

கேள்வி: உலகில் எல்லா இன்ப, சுகங்களுக்கும் காரணம் எது?

பதில்: புண்ணியச் செயல்கள்.

கேள்வி: துன்பத்துக்குக் காரணம் எது?

பதில்: பாவச் செயல்கள்.

கேள்வி: எல்லாவிதச் செல்வங்களும் யாருக்குக் கிடைக்கும்?

பதில்: பக்தியுடன் பகவான் சங்கரனை பூஜிப்பவருக்கு.

கேள்வி: எவன் மேன்மேலும் வளர்ச்சியுறுகிறான்?

பதில்: அடக்கம் உடையவன்.

கேள்வி: எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்?

பதில்: திமிர் அல்லது அகங்காரம் கொண்டவன்.

கேள்வி: எவன் நம்பத் தகாதவன்?

பதில்: அடிக்கடி பொய் பேசுகிறவன்.

கேள்வி: எந்த சூழ்நிலையில் பொய் பேசுவது பாவச் செயல் ஆகாது?

பதில்: தர்மத்தைக் காக்கச் சொல்லப்படும் பொய்.

கேள்வி: எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தர்மம் எது?

பதில்: அவரவர் குலத்தில் தோன்றிய முன்னோர்களும் ஆசார சீலர்களும் கடைப்பிடித்த தர்மமே.

கேள்வி: சாதுக்களுக்கு பலம் எது?

பதில்: தெய்வம்.

கேள்வி: சாது என்பவன் யார்?

பதில்: எதிலும் எப்போதும் திருப்தியோடு உள்ளவன்.

கேள்வி: தெய்வம் என்பது யாது?

பதில்: ஒருவனால் செய்யப்பட்ட நல்ல செயல்கள்.

கேள்வி: ஸுக்ருதி என்பவன் யார்?

பதில்: நல்லவர்களால் போற்றப்படுபவன்.

கேள்வி: இல்லறத்தில் உள்ளவனுக்கு உண்மை நண்பன் யார்?

பதில்: அவனுடைய மனைவி.

கேள்வி: இல்லறத்தான் யார்?

பதில்: யாகங்கள் செய்கிறவன்.

கேள்வி: யாகங்கள் யாவை?

பதில்: வேதங்களில் சொல்லப்பட்டவையும் மனித சமூகத்துக்கு நன்மை அளிப்பவையுமான செயல்கள்.

கேள்வி: யாருடைய செயல்கள் பயனுள்ளவை?

பதில்: நல்ல அனுஷ்டானங்களை உடையவனும், வேதத்தில் கூறப்பட்டபடி நடப்பவனும்.

கேள்வி: அவனுக்கு பிரமாணம், வழிகாட்டி எது?

பதில்: வேதமே ஆகும்.

கேள்வி: அனைவராலும் தாழ்த்தப்படுபவன் யார்?

பதில்: வேதநெறிப்படி செயல் ஆற்றாதவன்.

கேள்வி: எவன் உண்மையிலேயே பாக்யசாலி?

பதில்: முற்றும் துறந்தவன்.

கேள்வி: எவன் மதிக்கத்தக்கவன்?

பதில்: புலமையும் சாதுத் தன்மையும் ஒருங்கே கொண்டவன்.

கேள்வி: எவனுக்கு நாம் பணிவிடை செய்யலாம்?

பதில்: தானம் கொடுக்கும் தாராளமனம் படைத்தவனுக்கு.

கேள்வி: கொடைக்குணம் படைத்தவன் என்பவன் யார்?

பதில்: உதவி நாடி வருபவனை திருப்திபடுத்துகிறவன்.

கேள்வி: உடலைப் பெற்றவர்களுக்குச் சிறந்த பாக்கியம் எது?

பதில்: உடல் நலம்.

கேள்வி: உழைப்பின் பலனை முழுமையாகப் பெறுபவன் யார்?

பதில்: பயிர்த் தொழில் செய்பவன்.

கேள்வி: யாரை பாவங்கள் அணுகுவதில்லை?

பதில்: ஜபம் செய்கிறவனை.

கேள்வி: முழுமையான மனிதன் என்று யாரைச் சொல்லலாம்?

பதில்: மக்கட் பேறு பெற்றவனை.

கேள்வி: செயற்கரிய செயல் எது?

பதில்: மனத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது.

கேள்வி: பிரும்மசரியம் உடையவன் என்று யாரைக் கூறமுடியும்?

பதில்: தன்னுடைய வீரியத்தை வீணாக்காமல் கட்டுப்படுத்தி தியானத்தின் மூலம் அதை நல்ல முறையில் பயன்படுத்துபவனை.

கேள்வி: பரதேவதை என்று யாரைக் கூறலாம்?

பதில்: சத், சித், ஆனந்தம் என்பவற்றில் சித்சக்தியை.

கேள்வி: உலகுக்குத் தலைவன் யார்?

பதில்: சூரியன்.

கேள்வி: அனைவருக்கும் வாழ்வைக் கொடுப்பது எது?

பதில்: மழை.

கேள்வி: சூரன் என்று யாரைக் கூறலாம்?

பதில்: பயந்தவனைக் காப்பவனை அல்லது பயத்திலிருந்து மற்றவர்களைக் காப்பவனை.

கேள்வி: நம்மைக் காப்பவர் யார்?

பதில்: நம்முடைய குரு.

கேள்வி: ஜகத்குரு என்று யாரைக் கூறலாம்?

பதில்: பரமசிவனை.

கேள்வி: ஞானம் யாரிடமிருந்து கிடைக்கும்?

பதில்: பரமசிவனிடமிருந்து.

கேள்வி: எவ்வாறு நாம் மோட்சத்தைப் பெறலாம்?

பதில்: முகுந்தனிடம் பக்தி செய்வதன் மூலம்.

கேள்வி: முகுந்தன் என்பவன் யார்?

பதில்: உலக மாயை அல்லது அவித்யையில் இருந்து நம்மை விடுவிக்கிறவன்.

கேள்வி: அவித்யை என்பது யாது?

பதில்: ஆத்மாவைப் பற்றிய அறிவு அல்லது நினைப்பு இல்லாமை.

கேள்வி: யாருக்குத் துயரம் வராது?

பதில்: கோபம் கொள்ளாதவனுக்கு.

கேள்வி: சுகம் என்பது எது?

பதில்: மன நிறைவு.

கேள்வி: அரசன் என்பவன் யார்?

பதில்: மக்களை மகிழ்விப்பவன்.

கேள்வி: யாரை நாய்க்கு ஒப்பிடலாம்?

பதில்: நீசர்களை அண்டி, அவர்களுக்குச் சேவகம் செய்பவனை.

கேள்வி: மாயாவி என்பவன் யார்?

பதில்: பரமேஸ்வரன்.

கேள்வி: இந்திரஜாலம் போல் தோற்றம் அளிப்பது எது?

பதில்: இந்தப் பிரபஞ்சம்.

கேள்வி: கனவுத் தோற்றத்துக்கு நிகரானது எது?

பதில்: விழித்திருக்கும்போது நடைபெறும் நிகழ்ச்சிகள்.

கேள்வி: ஸத்யமானது, உண்மையானது எது?

பதில்: பிரும்மம்.

கேள்வி: பொய்யான தோற்றம் எது?

பதில்: உண்மை அறிவால் போக்கக் கூடிய தவறான எண்ணம்.

கேள்வி: பயனற்றது எது?

பதில்: முயலுக்குக் கொம்பு உண்டா என்பது போன்ற வீண் சர்ச்சைகள்.

கேள்வி: விவரித்துச் சொல்ல முடியாதது எது?

பதில்: மாயை (பொய்த் தோற்றம்).

கேள்வி: நாமாக நினைத்துக் கொண்டிருப்பது எது?

பதில்: ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு என்ற எண்ணம்.

கேள்வி: பாரமார்த்திகம் அல்லது முற்றும் உண்மையானது எது?

பதில்: அத்வைதம், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அறிவு.

கேள்வி: அறியாமை எப்போது உண்டாயிற்று?

பதில்: அது அனாதியாய் உள்ளது; தோன்றிய காலம் தெரியாது.

கேள்வி: உடலைக் காப்பது எது?

பதில்: அவரவர் செய்த நல்வினை, தீவினைகள். நாம் ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவச் செயல்தான் அன்னத்தையும் கொடுத்து
ஆயுளையும் வளர்க்கச் செய்கிறது.

கேள்வி: வழிபாட்டுக்கு உரியவர் யார்?

பதில்: காயத்ரி மந்திரம், சூரியன், அக்னி மூன்றிலும் அடங்கியுள்ள பரமேச்வரனே.

கேள்வி: காயத்ரி, சூரியன், அக்னி ஆகியவற்றில் அடங்கி நிற்பது எது?

பதில்: பெற்ற தாய்.

கேள்வி: நம் பூஜைக்குரியவர் யார்?

பதில்: தந்தை.

கேள்வி: எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கி இருப்பவன் யார்?

பதில்: கல்வியும் கர்மானுஷ்டானங்களும் நிறைந்தவர்கள்.

கேள்வி: குல நாசத்துக்குக் காரணம் யாது?

பதில்: சாதுக்கள் மனம் வருந்தும்படி செய்யும் செயல்.

கேள்வி: யாருடைய சொற்கள் பொய்க்காதவை?

பதில்: சத்யம், மௌனவிரதம், சாந்தி ஆகியவற்றை விரதமாக மேற்கொண்டவர்களின் சொற்கள்.

கேள்வி: பிறவிக்குக் காரணம் யாது?

பதில்: சிற்றின்பத்தில் ஏற்படும் பற்று.

கேள்வி: நமது மேல் பிறப்பு என்பது எது?

பதில்: பிள்ளையாகப் பிறத்தல்.

கேள்வி: தவிர்க்க முடியாதது எது?

பதில்: மரணம்.

கேள்வி: எப்படிக் காலடி எடுத்து வைக்க வேண்டும்?

பதில்: நன்றாகப் பார்த்து, கவனித்து, சுத்தமான இடமென்று தெரிந்து கொண்டு.

கேள்வி: அன்னதானம் பெறத் தகுந்தவன் யார்?

பதில்: நல்ல பசியோடு இருப்பவன்.

கேள்வி: உலகில் யாரை நாம் பூஜிக்க வேண்டும்?

பதில்: பகவானின் அவதாரங்களை; அவதார வடிவங்களில் உள்ள மூர்த்தங்களை.

கேள்வி: பகவான் யார்?

பதில்: சங்கரனாகவும், நாராயணனாகவும் உள்ள பரம்பொருள்.

கேள்வி: பகவானிடத்தில் செலுத்தும் பக்திக்குப் பயன் என்ன?

பதில்: மாறாத, கலப்பற்ற ஆனந்தம்.

கேள்வி: மோட்சம் என்பது என்ன?

பதில்: அவித்யை நீங்குதல்.

கேள்வி: எல்லா வேதங்களுக்கும் உற்பத்தி இடம் எது?

பதில்: ஓம் என்னும் பிரணவம்.

இந்த ப்ரச்னோத்ர ரத்ன மாலிகாவை யார் மனப்பாடம் செய்து, அதன்படி நடக்கிறார்களோ, அவர்கள் சாதுக்களிடையே சிறந்து விளங்கி, ரத்னங்கள் போல் உலகில் திகழ்வார்கள்.