''சூழ்நிலைகளால் வேதனைகள் உருவாவதில்லை. அந்தச் சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல், நீங்கள் செய்யும் குளறுபடிகள்தாம் அதை விபரீதமாக்குகின்றன!''
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
கடவுளின் குழந்தைகள் என்ற முத்திரை ஏன்?
ஒரு முறை குன்னூரில் தங்கி, ஊட்டியில் மாலை வகுப்பு எடுக்கக் காரில் சென்றுகொண்டு இருந்தேன். மாலை நேரம். எலும்பைத் தொடும் குளிரில், தெருஓரம் மேல் துணியில்லாமல் ஒரு பெண் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். முப்பது வயதிருக்கலாம். அவள் முகத்தில் இருந்த துன்பமும் வேதனையும் கண்டு வண்டியை நிறுத்தினேன். அவள் சற்று மனநலம் பிசகியவள் என்பதால், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவள் என்று பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டு என் மனைவி கண் கலங்கினாள்.
அந்தப் பெண்ணைக் குளிரிலிருந்து உடனடியாகப் பாதுகாக்க, நான் அணிந்திருந்த மேல் துணியை எடுத்து, அவள் மீது போர்த்தினேன். அவளிடம் உணவுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.
இப்படிச் சிலரை மன நலம் குன்றியவர்களாகச் சமூகம் ஒதுக்கிவைப்பதை அவ்வப்போது காண்கிறேன்.
மனதளவிலோ உடலளவிலோ ஒருவரை ஊனமுற்றவர் என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்துத்தானே?
உங்களைவிட அதீத புத்திசாலியாக விளங்குபவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், உங்களுக்கும் புத்தி குறைவுதானே? அதற்காக உங்களையும் புத்தி அளவில் ஊனமானவர் என்று சொல்லலாமா?
அமெரிக்க வகுப்புகளில் பங்குகொண்ட ஒரு பெண்மணிக்கு ஜூலி என்று ஒரு மகள் இருக்கிறாள். ஜூலி குறுகிய தலையும், மிகப் பெருத்த உடலுமாக, குள்ளமான தோற்றத்துடன் இருப்பாள். ஜூலிக்கு 24 வயது. ஆனால், மூளையைப் பொறுத்தவரை எட்டு வயதுச் சிறுமியின் வளர்ச்சிதான்.
'ஜூலி மீது மிகுந்த அன்புகொண்டு இருந்த அவளுடைய பாட்டிதான் அவளை வளர்த்து வந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்பு அந்தப் பாட்டி இறந்துவிட்டாள். அப்போதிருந்து ஜூலி மிகவும் நிலையற்று இருக்கிறாள். 'ஜூலி உங்கள் வகுப்பில் அமரலாமா?' என்று அவள் அம்மா கேட்டாள். ஜூலியிடம், 'உனக்கு விருப்பமா?' என்று கேட்டேன். அவள் மிக விருப்பம் என்றாள்.
அவளை எந்த விதத்திலும் வித்தியாசப்படுத்தாமல், மற்றவரிடம் நடந்துகொள்வது போலவே நடந்துகொண்டேன். அவளிடம் நான் சற்று இரக்கமற்றவனாக இருப்பதாகக்கூட சிலருக்குத் தோன்றியது. அப்படி அல்ல. தனியான கவனம் கொடுப்பதைவிட, மற்றவரைப் போலவே தானும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அவள் ஆசை.
வகுப்பில் நான் சொன்ன பல விஷயங்கள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அசையாமல் என்னைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில், என் சக்தி அலைவரிசை அவளை எட்டியது. அவள் உடலில் துள்ளலான அதிர்வுகள் தோன்றின. அதற்குப் பிறகு மேல்நிலை வகுப்பு வரை வந்த தியான அன்பர்களிடம் காணக்கூடிய சக்தி மாற்றம் அவளிடம் காணப்பட்டது. ஒரு சில நாட்கள் கழித்து அவள் என்னிடம் 'என் பாட்டி இல்லாத குறை எனக்கு இப்போது தெரியவில்லை' என்றாள்.
பொதுவான அளவுகோல்களின்படி, மூளை வளர்ச்சியில் அவள் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், அற்புதமான பெண்.
மனநலத்தில் பின்தங்கியவர் பொதுவாகத் தாமாகத் துன்பப்படுவதில்லை. அவர் உங்களையெல்லாம்விட மிக சந்தோஷமாகத்தான் இருக்கிறார். வெளிச் சூழ்நிலை களால் பாதிப்பில்லாமல் குழந்தைகள் போல் இருப்பது ஒரு வரம். அதை நீங்கள் குறைபாடாக நினைத்து, அவரை ஏளனமாகப் பேசுகிறீர்கள். அவரைப் பார்க்கும் பார்வையில், நடத்தும் விதத்தில், குறைபாடுள்ளவர் என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படி நீங்கள்தான் அவரை வருத்தப்பட வைக்கிறீர்கள்.
உங்களால் மட்டும் உங்கள் உடலையும் மனதையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறதா என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். மனநலம் தவறியவராக உங்களால் கருதப்படுபவருக்கும் உங்களுக்கும் அளவுகோலில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. அவ்வளவுதானே?
எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருடைய மனைவி கர்ப்பமாயிருந்தபோது, அவரை ஒரு கொடிய விஷத் தேள் கடித்துவிட்டது. விஷம் வயிற்றில் இருக்கும் சிசுவைப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் கருதினார். மனைவியிடம் கருக்கலைப்பு செய்யலாம் என்றுகூடச் சொன்னார். ஆனால், ஐந்து மாதக் கர்ப்பத்தைச் சிதைக்க மனைவிக்கு மனமில்லை.
ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் பயந்தபடி, குழந்தை மாறுபாடான உடல் கொண்டிருந்தது. அதன் தலை மட்டும்தான் முழுமை அடைந்திருந்தது. கைகள், கால்கள் உருவாகாமலேயே குழந்தை பூமிக்கு வந்துவிட்டது.
டாக்டரின் வீட்டில் நான் தங்க நேர்ந்தபோதெல்லாம், அவர்கள் தங்கள் குழந்தையைப் பார்த்து பெரும் வேதனை கொள்வதைக் கவனித்தேன். மற்றவரைப் போல் இயங்க முடியாத சிறுவனாக இருந்தாலும், பெற்றோரிடம் காணப்பட்ட வேதனை அவனிடம் இருந்ததில்லை. எதையும் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததே அவனுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. தான் எதையோ இழந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. அவன் எப்போதும் சிரித்துக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தான். என்னைப் பார்த்தால் உருண்டு உருண்டு வருவான். என் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுவான்.
எந்தவித ஊனமும் இல்லாதவராகத் தங்களை நினைக்கும் பலரிடம் காண முடியாத சந்தோஷத்தை அந்தக் குழந்தையிடம் என்னால் பார்க்க முடிந்தது. அப்படியானால், யார் ஊனமுற்றவர்கள்?
ஒருவேளை, எல்லா மனிதர்களுக்குமே இரண்டு கைகளுமே இல்லாது போயிருந்தாலும், பிழைத்திருப்போம்தானே? அப்புறம் ஏன் ஒற்றைக் கை குறைந்தால், அவரைக் குறைபாடானவர் என்று நினைக்கிறீர்கள்? பறவைகளும் பாம்பும் கைகள் இல்லாமல் வாயை அற்புதமாகப் பயன்படுத்தவில்லையா?
உடல் அளவிலும் மன அளவிலும் ஒரு வித இயலாமை இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்குச் சில இடங்களில் சில உதவிகள் செய்யப்பட வேண்டியதுதான். அதற்காக ஊனம் என்று முத்திரை குத்துவதா?
பெரிய மூளையை வைத்துக்கொண்டு அதை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களைவிட, இவர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்கள்? முறைப்படுத்தத் தெரியாமல் அதீத திறன் இருந்தால், அதுதான் ஆபத்து. இருக்கும் மூளையைக் கொதிக்க விட்டுக்கொண்டு, எப்போதும் நிம்மதியற்று இருப்பதைவிட மூளையே இல்லாமல் சாதுவாகப் போய்க்கொண்டு இருப்பவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
ஒன்று ஊனம் என்பார்கள்; அல்லது, கடவுளின் குழந்தை என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி மற்றவர்களிலிருந்து ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ஊனமுற்றவர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பிரத்யேகமானவர் என்று சொல்வதும். மாறுபாடான உடலுடனோ, புத்தியுடனோ பிறந்த குழந்தையையும் ஒரு சாதாரண, இயல்பான குழந்தையாகப் பார்க்கும் பக்குவம் சமூகத்தில் வர வேண்டும்.
உண்மையில், உடலிலும் மனதிலும் ஊனம் என்று ஒன்று இல்லவே இல்லை. வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறுவிதமாக இந்தப் பூமிக்கு வருகிறார்கள். வெவ்வேறு திறன்களோடு வளர்கிறார்கள். அவ்வளவுதான்.
பாரபட்சத்தை விடுத்து முழுமையான மனித நேயத்துடன் பழகினால், யாரிடமும் எந்தக் குறைபாடும் தெரியாது. எந்த வருத்தமும் துன்பமும் இருக்காது!