Tuesday, March 10, 2009

தகவல் பலகை
தலம் : மருதாநல்லூர்
சிறப்பு : ஸ்ரீராதாகிருஷ்ண ஸ்வாமி மடம் என்கிற ஸத்குரு ஸ்வாமிகள் மடம்
எங்கே இருக்கிறது?: கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், சுமார் 6 கி.மீ. தொலைவு. மருதாநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மெயின் சாலையிலேயே சிறிது தொலைவு நடந்தால், கூப்பிடு தூரத்தில் இந்த மடம் அமைந்துள்ளது.
எப்படிப் போவது?: கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, வடசேரி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகள் மருதாநல்லூர் வழியாகச் செல்லும். தவிர கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் நகரப் பேருந்துகள் எண் 20, 21, 32 ஆகியவை மருதாநல்லூர் வழியாகச் செல்கின்றன.
தரிசன நேரம்: காலை 9- 12:00-மாலை 5- 07:30.
தொடர்புக்கு:
ஸ்ரீகுரு கோதண்டராம ஸ்வாமிகள்
ஸத்குரு பீடாதிபதி
மருதாநல்லூர் அக்ரஹாரம்
மருதாநல்லூர் ஆர்.எம்.எஸ்.
கும்பகோணம் 612 402.
போன் : 0435- 241 4946
மொபைல் : 99408 29095

மருதாநல்லூர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள்

கலியுகத்தில் இறைநாம ஜபமே, கடவுளின் அருளைப் பெறுவதற்கான சிறந்த வழி. 'நாராயண... நாராயண...' என்று எப்போதும் ஸ்ரீமந் நாராயணனின் திருநாமத்தையே உச்சரித்த ஸ்ரீநாரதரில் ஆரம்பித்து, இந்தப் பூவுலகில் அவதரித்த மகான்கள் பலரும் இறை நாம ஜபத்தின் சிறப்பை வலியுறுத்தியுள் ளனர்; இதனால் நமக்குக் கிடைக்கும் பேறுகளையும் விளக்கியுள்ளனர்.
சுமார் ஐந்நூறு வருட காலத்துக்குள் நாம ஜபத்தின் மகிமையை எண்ணற்ற மகான்கள், நாடெங்கிலும் பரப்பி வந்தனர். தமிழகத்தில் இந்தப் பணியை எந்த படாடோபமும் இன்றி செய்து வந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்- கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் முதலானோர். ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீதர ஐயாவாளும் ஏறத்தாழ சம காலத்தவர்கள். இவர்களுக்குப் பிறகு சுமார் 100 வருடம் கழித்து அவதரித்தவர் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள். ஸ்ரீராம நாமம் ஜபிப்பதையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்த ஸத்குரு ஸ்வாமிகள், ஸ்ரீராமபிரானின் பரிபூரண ஆசியைப் பெற்றிருந்தார். இதை, இவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களே மெய்ப்பிக்கின்றன.

திருவிசநல்லூர் கிராமத்தில் கி.பி. 1777-ஆம் ஆண்டில் அவதரித்தவர் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள். இவரது இயற்பெயர் வேங்கடராமன். மூன்று வயது வரை ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்காமல், வாய் பேச முடியாமலேயே இருந்தார். 'முத்தான மழலைப் பேச்சை மகனிடம் இருந்து கேட்க முடியவில்லையே... இப்படி ஊமையாக இருக்கிறானே' என்று ஏங்கித் தவித்துப் போனார் தந்தையான வேங்கட


சுப்ரமண்ய ஐயர். ஈன்றெடுத்த தாயாரோ மருகிப் போனாள். மகனுக்கு பேச்சு வரவேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை; பார்க்காத மருத்துவம் இல்லை.

இந்த நிலையில், பல சேத்திரங்களுக்கு யாத்திரை சென்று வரும் துறவி ஒருவர், திருவிசநல்லூருக்கு வந்தார்.ஸ்வாமிகளின் பெற்றோர், துறவியை தங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்து நமஸ்கரித்தனர். அவரிடம் தங்களது குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை என்பதைக் கூறி வருந்தினர். குழந்தையான வேங்கடராமனை கூர்ந்து கவனித்த துறவி, புன்னகைத்தார். பின்னர் வேங்கட சுப்ரமண்ய ஐயரைப் பார்த்து, ''இந்தக் குழந்தையா ஊமை? இவன், தெய்வாம்சம் நிரம்பிய திருப்புதல்வன். இவனை மகனாகப் பெற்றது, உங்களின் பாக்கியம். வருந்த வேண்டாம்... விரைவில் திருவாய் மலர்வான்'' என்று ஆசீர்வதித்துச் சென்றார்.

திருவிசநல்லூருக்கு அருகில் உள்ள மணஞ்சேரியில் கோபால ஸ்வாமிகள் எனும் பாகவதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் ராம நாம ஜபத்திலேயே மூழ்கி இருக்கும் இவரது மகிமையை அறிந்த வேங்கடசுப்ரமண்ய ஐயர், தன் மகனுடன் சென்று பாகவதரைச் சந்தித்தார். குழந்தையின் காதில் 'ராம' நாமத்தை ஓதிய பாகவதர், ''குழந்தாய்... உன் செவியில் நான் இப்போது சொன்ன மந்திரத்தைத் திருப்பிச் சொல்லப்பா'' என்றார்.

என்னே ஆச்சரியம்! அதுவரை பேசாமல் இருந்த வேங்கடராமன், ''ராம... ராம... ராம...'' என்று இறைவனது திருநாமத்தை உதிர்த் தான். பெற்றவர்கள் மகிழ்ந்தனர்.

ஏழு வயதில் ஸத்குரு ஸ்வாமிகளுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. தந்தை யிடம் சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். ஆன்மிகக் கதைகளையும் அதில் உள்ள தத்துவங்களையும் தாயாரிடம் கற்றார். வித்வான் ஒருவரிடம் சங்கீதம் கற்றார். இப்படி அனைத்திலும் தேர்ந்த ஞானியாக விளங்கினார் ஸத்குரு ஸ்வாமிகள்.

வேங்கட சுப்ரமண்ய ஐயர், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று சிராத்தம் முதலான காரியங்களைச் செய்து வருவது வழக்கம். ஒரு முறை, மணஞ்சேரி கிராமத்தில் இருந்த ஒருவரது வீட்டில் சிராத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், சிராத்தத்தை நடத்துவதற்கு அவரால் செல்ல இயலவில்லை. எனவே, ஸத்குரு ஸவாமிகளை அனுப்பி வைத்தார். அதுவரை சிராத் தம் முதலான காரியங்களை செய்து பழக்கம் இல்லையென்றாலும் தந்தை இட்ட பணியை சிரமேற்கொண்டு ஏற்றார் ஸத்குரு ஸ்வாமிகள். சிராத் தம் செய்வதற்குத் தேவையான சமித்து, தர்ப்பை மற்றும் பூணூல் ஆகியவற்றைத் தந்தையார் எடுத்துக் கொடுக்க... அவற்றை எடுத்துக் கொண்டு மணஞ்சேரி கிராமத்துக்குப் புறப்பட்டார் ஸத்குரு ஸ்வாமிகள்.

வழியில் ஸ்வாமிகளுக்கு ஒரு யோசனை. தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ராம நாமத்தை ஜபித்து வருபவர் ஸ்வாமிகள். இன்று சிராத்தம் செய்யச் சென்றால், ராம நாமம் ஜபம் தடைபடுமோ... என்று கலங் கினார். எனினும் தந்தையாரின் சொல்லை நிறைவேற்றும் பொருட்டு, சிராத்தம் நடத்தி வைக்கப் பயணித்தார். ஆனால், ஸ்ரீராமபிரானது விருப்பம் வேறு மாதிரியாக இருந்தது.

மணஞ்சேரி கிராமத்துக்குள் நுழைந்ததும் அங்கு உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தைக் கண்டார் ஸ்வாமிகள். உள்ளே நுழைந்தவர், சமித்து, தர்ப்பை, பூணூல் ஆகியவை அடங்கிய பையை ஒரு மூலையில் வைத்தார். அனுமனை தரிசிக்க சந்நிதிக்குச் சென்றார். அங்கு, ராம தூதனைக் கண்டதும் ஏகாந்த நிலையை அடைந்தார் ஸ்த்குரு ஸ்வாமிகள். தந்தையார் இட்ட பணியை மறந்தார். ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்து, ஸ்ரீராம நாம ஜபத்தில் மூழ்கினார். அவரின் சிந்தையெல்லாம் ஸ்ரீராமஜெயம்!

சூரியன் மறையத் தொடங்கிய மாலை வேளையில் - ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை ஜபித்து விட்டதை உணர்ந்த ஸ்வாமிகள், மெள்ள கண் விழித் தார். எதிரே... பலிபீடத்தில் ஒரு ஜோடி வேஷ்டியும், ஐந்து ரூபாயும் இருந்தது. ஏதோ ஒரு சக்தி உத்தரவிட... எழுந்து சென்று பய பக்தியுடன் எடுத்துக் கொண்டு, வெளியே வந்தார். அப்போதுதான் அவருக்கு உறைத்தது... 'பகல் முழுதும் ஆலயத்திலேயே இருந்து விட்டோமே... தந்தையின் வார்த்தையை மீறி விட்டோமே... பித்ரு காரியத்துக்காக ஒருவர் காத்திருக்க அதை அலட்சியம் செய்து விட்டோமே' என்று தவித்தார். காலம் கடந்து சிராத்த வீட்டுக்குச் செல்வது உசிதமாகாது என்று முடிவெடுத்து, வீடு திரும்பினார் ஸ்வாமிகள்.

மணஞ்சேரி ஆஞ்சநேயர் கோயிலில், ராம நாம ஜபம் செய்ததையும், அங்கே பலிபீடத்தில் ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாயும் இருந்ததையும் கூறியது மட்டுமின்றி, சிராத்தம் செய்து வைக்கத் தவறியதையும் பயமும் பவ்யமும் கலந்து தந்தையிடம் தெரிவித்தார் ஸ்வாமிகள்.

இதைக் கேட்டதும் முகம் வாடிப் போனார் வேங்கட சுப்ரமண்ய ஐயர். 'சிராத்தத்தை நடத்தி வைக்க வராமல் போனதற்காக, அந்த மணஞ்சேரி அந்தணர் தன்னைக் கடிந்து கொள்வாரே?' என்று கவலைப்பட்டார். அவரிடமே சென்று மன்னிப்பு கேட்டு விட எண்ணியவர், மகனிடம் எதுவும் சொல் லாமல் விறுவிறுவென தெருவில் இறங்கி, ஓட்டமும் நடையுமாக மணஞ்சேரிக்குச் சென்றார்.

இருள் சூழ்ந்த வேளை! மணஞ்சேரியை அடைந்தவர், சிராத்தம் நடத்தி வைப்பதாக தான் வாக்கு கொடுத்திருந்த அந்தணரது வீட்டுக்குள் தயக்கத்துடன் நுழைந்தார். வேங்கட சுப்ரமணிய ஐயரைக் கண்டதும், முகம் மலர ஓடி வந்து வரவேற்றார் அந்தணர்.

'சிராத்தத்துக்குத் தானோ, தன் மகனோ வந்து நடத்தி வைக்கவில்லை. எனினும் எப்படி இவரால் இப்படி புன்னகையுடன் உபசரிக்க முடிகிறது?' என்று வியந்தார் வேங்கட சுப்ரமண்ய ஐயர். பிறகு சிறிது தயக்கத்துடன், ''இன்னிக்குக் காலைல என் மகன் உங்க வீட்டுக்கு வந்து...'' என்று ஆரம்பிப்பதற் குள் இடைமறித்தார் அந்தணர்.

''கொஞ்சம் நிறுத்துங்கோ. முதல்ல நான் சொல் லிடறேன்...'' என்று அவர் கறாராக ஆரம்பிக்க... 'என்ன சொல்லப் போகிறாரோ?' என்று பதறினார் வேங்கட சுப்ரமண்ய ஐயர். ஆனால் அந்த மணஞ்சேரி அந்தணர் கண்களில் நீர் தளும்ப, ''சொன்ன நேரத்துக்குக் காலைல உங்க மகன் இங்கே வந்தான். சிராத்தத்தை திருப்தியா செஞ்சு வெச்சான். ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாய் பணமும் தட்சணையா கொடுத்து அனுப்பினேன். ஒரு விஷயம் சொல்றேன், கோவிச்சுக்கக் கூடாது... இது வரை நீங்க சிராத்தம் செஞ்சு வெச்சப்பக் கூட, இப்படியரு திருப்தி ஏற்பட்டதில்லை. இன்னிக்கு, உங்க பையன் பண்ணி வெச்ச சிராத்தத்துல பரம சந்தோஷம்'' என்று கரம் குவித்து அவருக்கு நன்றி தெரிவித்தார். வேங்கட சுப்ரமண்ய ஐயருக்கோ குழப்பம்!

திருவிசநல்லூர் திரும்பியவர், மகனை அழைத் தார். ''மணஞ்சேரிக்குப் போய் நீ சிராத்தம் செஞ்சு வெச்சதா அவரே சொல்றாரே... ஒரு ஜோடி வேஷ்டியும் ஐந்து ரூபாயும் தட்சணையா தந்தாராமே?'' என்றவர், தன் மகனின் முகத்தை ஏறிட்டார்.

அதிர்ந்து போனார் ஸ்வாமிகள். 'என்னது... நான் சிராத்தம் செஞ்சு வெச்சேனா? ஆஞ்சநேயர் கோயில்ல உக்காந்து, ராம நாமத்தை அல்லவா ஜபித்துக் கொண்டிருந்தேன்? அப்படியெனில், என் தந்தை இட்ட பணியை நிறைவேற்ற எனக்கு பதிலாக ஸ்ரீராமனே என் வடிவில் சென்றாரா?' என்று விதிர்விதிர்த்துப் போனார் ஸ்வாமிகள்.

தனது ராம பக்தி தடைபடக் கூடாது என்பதற்காக, ஒருவருக்கு சிராத்தம் செய்து வைத்ததுடன், அதற்கான சம்பாவணையான வேஷ்டி மற்றும் பணத்தையும் தன்னிடமே சேர்த்த தெய்வத்தின் கருணையை எண்ணி உருகினார் ஸ்வாமிகள்.

தனக்கு சேவை செய்யும் பக்தனின் பணியை நிறைவேற்ற, அந்த பரந்தாமனே சென்று சிராத்தம் செய்த அற்புதத்தை அறிந்து ஊரே வியந்தது.

ராமாயண உபந்யாசத்தை எங்கே கேட்க நேர்ந்தாலும், உணர்ச்சி வசப்பட்டு விடுவார் ஸ்வாமிகள். ஸ்ரீராமனுக்கு நேர்ந்த சோகங்களை உபந்யாசகர் உருக்கத்துடன் சொல்லும் போது, தன்னையே மறந்து அழுது விடுவார் ஸ்வாமிகள். பெற்றோர் விருப்பப்படி உரிய பருவத்தில், ஜானகி எனும் நங்கையைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தந்தையார் இறைவனடி சேர்ந்து விட, தாயார் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

தேசமெங்கும் பாத யாத்திரை செய்து ராம ஜபம், உஞ்சவிருத்தி, பூஜை, உபந்யாசம், பஜனை என்று பாகவத தர்மம் எதையும் விடாமல், அற்புதமாக நடத்தி வந்தார் ஸ்வாமிகள். நாம சங்கீர்த்தனத்தில் இவரது ஈடுபாட்டைக் கண்டு பிரமித்த ஆன்மிக அன்பர்கள், இவருக்கு சீடரானார்கள். யாத்திரையில் இவருடன் பங்கேற்று தொண்டு செய்து மனநிறைவு அடைந்தனர்.

ஒரு முறை, மனைவியுடன் அயோத்திக்குப் பயணித்தார் ஸ்வாமிகள். அப்போது இவரது கனவில் ஸ்ரீபோதேந்திரர் தோன்றி, 'மீண்டும் தென் திசைக்கு போ. அங்கு உன்னால் ஒரு நற்காரியம் நிகழ இருக்கிறது' என்றார். குருநாதர் இட்ட கட்டளைப்படி மறுநாளே வடக்கில் இருந்து தெற்கே புறப்பட்டார்.

தஞ்சை வளநாட்டுக்குத் திரும்பியதும், மருதா நல்லூர் எனும் ஊருக்கு வந்தார். இங்கு வசித்து வந்த வேங்கடராமய்யர் எனும் தனவான், ஸ்வாமி களின் அற்புதங்களை அறிந்து, அவரை அழைத்து உபசரித்தார். தனது இல்லத்திலேயே தங்க வேண்டும் என்று வேண்டினார். ஸ்வாமிகளும் சம்மதித்தார். பின்னர் தாயார் மற்றும் மனைவியுடன் மருதாநல்லூரில் வாழ்ந்து வந்தார் ஸ்வாமிகள். உஞ்சவிருத்தி, நாம ஜபம் என்று நாட்கள் நகர்ந்தன.

ஸத்குரு ஸ்வாமிகளை 'தெற்கே போ' என்று போதேந்திரர் பணித்தார் அல்லவா? எதற்காக ஸ்ரீபோதேந்திரர், இவரை இங்கே அனுப்பினார்?
ஸ்ரீபோதேந்திரர் மகாசமாதிக்குப் பிறகு பக்தர்கள் ஏறக்குறைய அவரை மறந்தே விட்டனர். இவரது அதிஷ்டானம் இருக்கிற திசையைக் கூட மறந்து விட்டனர். தனது அதிஷ்டானத்தைக் கண்டுபிடித்து, நாம ஜபத்தைப் பிராபல்யமாக்கும் வல்லமை ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்த ஸ்ரீபோதேந்திரர், இதற்காகவே ஸ்வாமிகளை தெற்கே அனுப்பி வைத்தார்.

மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமி களின் காலத்தில், கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டா னத்தை பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை! காரணம், அப்போது கரை புரண்டு ஓடிய காவிரியின் வெள்ளம் ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்தை முழுவதுமாக மூழ்கடித்தது. எவருக்கும் அதிஷ்டானம் புலப்பட வில்லை. இந்த நிலையில் தஞ்சை மகாராஜாவின் விருப்பப்படி, காவிரி நதியைச் சற்றே திசை (வடப் பக்கம்) திருப்பி, ஸ்ரீபோதேந்திரரின் அதிஷ்டானத்துக்கு எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் வராமல் தடுப்பு வேலைகளைத் திறம்படச் செய் தார் ஸத்குரு ஸ்வாமிகள். இதில் மகிழ்ந்த தஞ்சை மகாராஜா, ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகளை கௌரவித்து மகிழ்ந்தான்.

ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானத்தை மருதா நல்லூர் ஸ்வாமிகள் கண்டுபிடித்தது குறித்து ஒரு தகவல் சொல்வார்கள். அதாவது, அதிஷ்டானத்தை கண்டறியும் பொருட்டு தினமும், கால்களில் துணியைச் சுற்றிக் கொண்டு சுட்டெரிக்கும் காவிரி மணலில் படுத்து உருள்வாராம் ஸ்வாமிகள். காரணம்- மகானின் அதிஷ்டானம் இருக்கும் இடத் தில் அவரது கால்கள் படக் கூடாதல்லவா?

ஒரு நாள், ''ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இங்குதான் அவரது ஜீவன் உறங்கிக் கொண்டிருக் கிறது'' என்று ஆனந்தக் கூத்தாடினார் ஸ்வாமிகள். அப்போது உடன் இருந்த அரசு அதிகாரிகளும் பக்தர்களும், ''அதெப்படி, இங்குதான் அவரது ஜீவன் உறங்குகிறது என்பதை சர்வ நிச்சயமாகக் கூறுகிறீர்கள்? ஆற்று மணலில் எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரிதான் தெரிகிறது எங் களுக்கு?'' என்றனர்.

அதற்கு ஸத்குரு ஸ்வாமிகள் சொன்னார்: ''பக்தர்களே... ஒவ் வொரு பகுதியிலும் படுத்து, செவிமடுத்தபடி உருண்டு வந்தேன். இந்த இடத்தில் மட்டும் 'ராம ராம' எனும் நாமம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே, இங்குதான் அதிஷ்டானம் இருக்கிறது என்பதை கண்டறிந்தேன்''

அடுத்த கணம் அங்கு கூடி இருந்தவர்கள் அனைவரும் அந்த மணற்பரப்பில் விழுந்து, ஸ்ரீபோதேந்திராளை மானசீகமா கத் தொழுதனர். பிறகு, மகாராஜா அனுப்பிய வீரர்களது துணை யுடன் காவிரியைச் சற்றே வடக்கே திசை திருப்பி, ஸ்ரீபோதேந்திரர் அதிஷ்டானம் அமைக்கப் பட்டது.மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் காலத்தில் தஞ்சையை ஆண்டு வந்த மகாராஜா, சத்ரபதி சிவாஜியின் வழி வந்தவர். இறை வழிபாட்டில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர். மருதாநல்லூர் ஸ்வாமிகளின் அபிமான சிஷ்யராக விளங்கினார் மகாராஜா.

ஒரு நாள் ஸ்வாமிகளிடம், ''நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்குப் பின்னே நூற்றுக் கணக்கான பாகவதர்கள் எப்போதும் வந்து கொண்டிருக்கிறார்கள்; ராம நாமம் ஜபித்து வருகின் றனர். இவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கென்று ஒரு கிராமத்தையே உங்களுக்கு மான்யம் செய்து தர விரும்புகிறேன். இந்தக் காணிக்கையைத் தாங்கள் தயை கூர்ந்து ஏற்க வேண்டும்!'' என்றார் மகாராஜா.

ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மகிழ்ச்சி. ''நாம சங்கீர்த் தனம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று நீர் விரும்புவதே சந்தோஷம்! நீர் தரப் போகிற கிராமத்தை பாகவதர்கள் பெயரிலேயே மான்யம் செய்து கொடுத்து விடு. காலாகாலத்துக்கும் அவர் களது பெயரே அந்தக் கிராமத்துக்கு நிலைக்கட்டும்'' என்றார். உடனே திருவிசலூருக்கு அடுத்து இருக்கும் கிராமம் ஒன்றை, பாகவதர்களின் பெயருக்கு சாசனம் எழுதிக் கொடுத்தார் மகாராஜா. அதுவே 'பாகவதபுரம்' என்று இன்றும் அழைக்கப் படுகிறது.

இதையடுத்து பாகவதபுரம் கிராமத்தில் எண் ணற்ற பாகவதர்கள், குடும்பத்துடன் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர்- கோபால பாகவதர். மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகளின் சிஷ்யர் இவர். அதிகாலை வேளையில் காவிரியில் குளித்து விட்டு, ராம நாம ஜபம் செய்வது இவரது வழக்கம். உஞ்ச விருத்தி எடுத்து, தனது வாழ்வை கழித்தார். பிறகு, தினமும் மருதாநல்லூர் சென்று ஸத்குரு ஸ்வாமி களுக்கு பணிவிடைகள் செய்யும் பேறு பெற்றார்.

கோபால பாகவதர், தோல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தன்னை தரிசிக்க வரும் கோபால பாகவதரை அடிக்கடி கட்டிப்பிடித்து, ஆசி வழங்குவது ஸத்குரு ஸ்வாமிகளின் வழக்கம். அப்போது, கோபால பாகவதர் கூனிக்குறுகி நிற்பார். 'தோல் வியாதியில் உருக்குலைந்த எனது தேகத்தை, தகதகக்கும் பொன்னிற மேனி கொண்ட ஸ்வாமிகள் ஸ்பரிசிப்பதா? அபசாரம்... அபசாரம்' என்று பல முறை தவிர்த்து வந்தார் கோபால பாகவதர்.

ஆனாலும் ஸ்வாமிகள், தன் நிலையில் இருந்து மாறவே இல்லை. ஒரு கட்டத்தில், ஸ்வாமிகளுக்கு அருகே செல்லாமல், சற்று தள்ளி நின்றபடியே அவரை வணங்கி விட்டுத் திரும்பலானார் கோபால பாகவதர். ஸ்வாமிகளின் அருளாலும் ஸ்பரிசத்தாலும் அவரது நோய் பின்னாளில் பெருமளவு குறைந்ததாம்!

உஞ்சவிருத்திக்காக வரும் வேத வித்துக்களான அந்தணர்களுக்கு நிறைந்த மனதுடன் ஒரு பிடி அட்சதை போட்டால், அது நம் இல்லத்தில் பன் மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை!

ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் அவ்வப்போது உஞ்சவிருத்திக்காக சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் செல்வது வழக்கம். ஒரு முறை,
அருகில் உள்ள திப்பிராஜபுரம் எனும் கிராமத்துக்குச் சென்றார். அவருடன் பாகவதர்கள் பலரும் சென்றிருந்தனர்.

அங்கே அக்ரஹாரத்தில் பஜனை சம்பிரதாயப் பாடல்களைப் பாடியபடியே உஞ்சவிருத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு வீட்டுத் திண்ணையில் பாலகணேசன் என்கிற அந்தணன், ஸ்வாமிகள் வரும் திசையில் கால்களை நீட்டி படுத் திருந்தான். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பாலகணேசனிடம் வந்து, ''யப்பா... சீக்கிரம் எழுந்திரு... ஸத்குரு ஸ்வாமிகள் உஞ்சவிருத்திக் காக பாகவதர்களுடன் வந்து கொண்டிருக்கிறார். இந்த வேளையில் நீ இப்படி படுத்திருந்தால், ஸ்வாமி களையும் அவருடன் வரும் பாகவதர் களையும் அவமதிப்பது போலாகும்'' என்று படபடத்தார்.

ஆனால், இதை பாலகணேசன் லட்சியம் செய்யவே இல்லை. ''என் வீட்டுத் திண்ணையில் நான் கால் நீட்டிப் படுத்திருக்கிறேன். ஸ்வாமிகள் வந்தாலென்ன... வேறு யார் போனாலென்ன...'' என்று திமிருடன் பதில் சொன்னான். அதே நேரத் தில், ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் அவன் வீட்டு வாசலை அடைந்தார். 'வீட்டுக்குச் சொந்தக்காரனான பிராமணன் தங்களை அவமதிக்கும் வகையில் இப்படிக் கால்களை நீட்டிப் படுத்திருக்கிறானே' என்று ஸ்வாமிகளுடன் வந்திருந்த பாகவதர்கள் வருந்தினர். ஸத்குரு ஸ்வாமிகளும் அவன் மேல் பரிதாபப்பட்டார். அறியாமல் அவன் செய்யும் செயலுக்காக வருந்தினார். இருந்தாலும், இந்தப் பாபம் சும்மா விடுமா?

பாகவதர்கள் தனது வீட்டை கடந்து சென்ற விநாடி முதல் கடும் வயிற்றுவலியால் துடிக்க ஆரம்பித்தான் பாலகணேசன். வலி தாங்க முடியா மல் வீட்டுத் திண்ணையில் அப்படியும் இப்படியும் விழுந்து புரளும் பாலகணேசனை கண்டு, மனம் கலங்கிய அவன் தாயாரும் மனைவியும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது, எதிர் வீட்டுப் பெரியவர் ஒருவர், ''குரு அபசாரம் செய்து விட்டான் பாலகணேசன். தவிர, பாகவதர்களையும் அவமதித்து விட்டான். இதற்கெல்லாம் பரிகாரமே இல்லை. பாகவதர்களின் திருப்பாதம் பட்ட நீரை பிரசாதமாக அருந்தினால் குணமாவான்'' என்று சொன்னார்.

இதைக் கேட்டு ஆறுதல் அடைந்த பாலகணே சனது மனைவி உடனே மருதாநல்லூரை நோக்கி நடந்தாள். திப்பிராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உஞ்சவிருத்தியை முடித்து விட்டுத் திரும்பி இருந்த ஸத்குரு ஸ்வாமிகளை சந்தித்தவள், அவரின் திருப் பாதங்களில் வீழ்ந்து, கணவனின் செயலுக்காக மன்னிப்பு கேட்டாள்.

பிறகு, பாகவதர்களின் பாதம் பட்ட தீர்த்தத்தை அவளிடம் கொடுத்து அனுப்பினார் ஸ்வாமிகள். சந்தோஷத்துடன் வீடு திரும்பியவள், வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த கணவனுக்கு அந்த தீர்த்தத்தை அருந்தக் கொடுத்தாள். அதன் ஒரு துளி பாலகணேசனது வாயில் பட்டதுமே அவனது வயிற்று வலி பறந்து போனது. இதன் பின் ஸ்ரீமடத்தின் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் பாலகணேசன்.

தாயாரின் மறைவுக்குப் பிறகு, தன் முக்கிய சிஷ்யரான பச்சை கோதண்டராம ஸ்வாமியிடம் விடை பெற்றுக் கொண்டு, மருதாநல்லூரில் இருந்து புறப்பட்டார் ஸ்வாமிகள். அவரது பயண நோக்கத்தை அறியாமல், அவரின் சிஷ்யர்களும் பின்தொடர்ந்தனர்.

கும்பகோணம்- திருவையாறு சாலையில் கணபதி அக்ரஹாரத்துக்கு அருகே உள்ள ஆடுதுறை பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்வாமி தரிசனம் செய்தார். சிஷ்யர்கள் ஸ்ரீராம நாம ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

அன்று ஸ்ரீராம நவமிக்கு முந்தைய தினம். வருடம்- 1817.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஸ்வாமி கள் தன் சிஷ்யர்களைப் பார்த்து, ''பக்தர்களே! மேலே பாருங்கள்... என்னை அழைத்துச் செல்வதற்காக பகவான் மகாவிஷ்ணு, விமானத்துடன் வருகிறார். என் பயணம் சிறக்கும் வகையில், அனைவரும் பகவானின் திவ்ய நாமத்தைச் சொல்லுங்கள்... உரக்கச் சொல்லுங்கள்'' என்று கூறியபடியே பகவான் சொரூபத்துடன் கலந்து விட்டார் ஸ்வாமிகள். அப்போது அவருக்கு 41 வயது!

ஸ்ரீராதாகிருஷ்ண ஸ்வாமி மடம் என அழைக்கப்படும் ஸத்குரு ஸ்வாமிகளின் மடத்தை மருதாநல்லூரில் தரிசிப்போமா?

ஆடுதுறை பெருமாள் கோயிலில், பகவான் சொரூபத் தில் கலந்து விட்டதால், ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகளுக்கு அதிஷ்டானம் இல்லை. அவர் ஆராதித்த திருமடமே, அவரது நினைவாலயமாகப் போற்றப்படுகிறது.

ஸ்வாமிகளுக்கு ராதாகிருஷ்ணதாசன் எனும் சிஷ்யர் ஒருவர் இருந்தார். இவர் சிறுவனாக இருக்கும் போதே தன்பால் ஏற்று, இறை இன்பத்தை அவனுக்கு போதித்து அருளினார் ஸ்வாமிகள்.

குரு பக்தியின் காரணமாக இந்த மடத்தின் மீது பிரியம் கொண்டு, சில கட்டுமானங்களைத் திறம்படச் செய்தவர் ராதாகிருஷ்ணதாசன். எனவே, இவரது திருப்பெயரைக் கொண்டு இந்த மடம் ஸ்ரீராதாகிருஷ்ண ஸ்வாமி மடம் என்று அழைக்கப்பட்டது.

ஸ்ரீஸத்குரு பீடாதிபதிகளின் பரம்பரை வருமாறு: இதன் ஸ்தாபகர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள் (1803- 1817). இவருக்குப் பின் 2-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றவர் பச்சை கோதண்டராம ஸ்வாமிகள் என்கிற ஸ்ரீகுரு ஸ்வாமிகள் (1817- 1848). ஸ்வாமிகள் மருதா நல்லூரில் தங்குவதற்கு இடம் மற்றும் வசதிகள் செய்து கொடுத்த வேங்கடராமய்யரின் மகன் இவர்.

இவரை அடுத்து 3-வது பீடாதிபதியாக ஸ்ரீகுரு கல்யாணராம ஸ்வாமிகள் (1848- 1916), 4-வது பீடாதிபதியாக ஸ்ரீகுரு கோதண்டராம ஸ்வாமிகள் (1916- 1917), 5-வது பீடாதிபதியாக ஸ்ரீகுரு கல்யாணராம ஸ்வாமிகள் (1917- 1996) ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர். இந்தப் பரம்பரையில் தற்போது 6-வது பீடாதிபதியாக பொறுப்பேற்று ஸ்ரீமடத்தை நிர்வகித்து வருபவர் ஸ்ரீகுரு கோதண்டராம ஸ்வாமிகள்.

உஞ்சவிருத்திக்குச் செல்லும்போது ஸத்குரு ஸ்வாமிகளுக்கு, அவரது சீடர்கள் வெண்கொற்றக் குடை பிடித்தபடியும் இரு புறமும் வெண்சாமரம் வீசியபடியும் வருவர். இரண்டு சீடர்கள் வெள்ளித் தடி ஏந்தியபடி முன்னே செல்வார்கள். இந்த உஞ்சவிருத்திக் காட்சியே அத்தனை அழகு!

தஞ்சாவூர் மகாராஜா, ராமநாதபுரம் மன்னர், சிவகங்கை ராஜா முதலானோர் இந்த மடத்துக்கு பல உதவிகளைச் செய்துள்ளனர். ஸ்வாமிகள் தன் கைப்பட எழுதிய கிரந்தங்கள் இங்கே பாதுகாப்பாக பூஜையில் வைக்கப்பட்டுள்ளன.

அழகிய வண்ண ஓவியமாக ஸ்வாமிகளின் திருவுருவம் பிரதானமாகக் காணப்படுகிறது. தவிர, அவரது உற்ஸவர் விக்கிரகமும் உண்டு. பஜனை சம்பிரதாயப்படி எல்லா உற்ஸவங்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. ஸ்வாமிகள், இறைவனுடன் இணைந்த பங்குனி மாதம் சுத்த அஷ்டமி (வளர்பிறை) அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தன்னலம் கருதாமல், இறை நாமத்தை ஜபிப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டு, இறை வனுடன் ஐக்கியமாகி விட்ட மருதாநல்லூர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகளின் திருப்பாதம் பணிவோம்!