Monday, April 27, 2009

உடல்....உயிர்...கடவுள்!

ஆனந்தம்... பரமானந்தம்!

உணவு விடுதிகளிலும் திருமணப் பந்திகளிலும் தங்களது இலையைப் பார்த்துச் சாப்பிடுவதைவிட, அடுத்தவர் இலையைப் பார்த்து சாப்பிடும் வேடிக்கையை, வேடிக்கை பார்த்திருக்கிறேன்! நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, பிறர் என்ன சாப்பிடுகின்றனர் என அறிவதில்தான் பலருக்கும் ஆர்வம்!

'இனிப்பு சாப்பிடாதீர்கள்... அதிகம் சதை போடும்' என்று குண்டான ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள். 'இனிப்பு சாப்பிட்டா சதை போடும் என்பதெல்லாம் உண்மையில்லை சார்! என் நண்பர் ஒருத்தர்... எவ்வளவு இனிப்பு சாப்பிடுவார் தெரியுமா? அவரு ஒல்லியாத்தான் இருக்காரு... இனிப்புக்கும் குண்டுக்கும் சம்பந்தமே இல்லை!' என்று அவசர அவசரமாக மறுப்பார். 'இன்னொருவர் சாப்பிடுகிறார். எனவே, நான் சாப்பிட்டால் என்ன?' என்று கேட்பதுதான் நம்மவர்களது வாதம்!

இது, பிழையான அணுகுமுறை. ஒருவருக்கு எது அமுதோ, அது மற்றவருக்கு விஷமாகவும் முடியும். மற்றவருக்கு எது விஷமோ, அது இன்னொருவருக்கு அமுதமாக இருக்கும். இன்னொரு விஷயம்... அளவு மாறினாலும் அமுதம் விஷமா கும்; விஷம் அமுதாகும்!


உடம்பின் சூட்சுமத் தன்மை மனிதருக்கு மனிதர் வேறுபடும். நம் உடம்பின் இயங்கும் தன்மை என்ன என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். சிலரது உடல்வாகு, உள்ளே செல்லும் உணவின் தன்மையை அதிகம் உள்வாங்காது.

அப்படியே வெளியே தள்ளி விடும். சிலருக்கு... கொஞ்சம் சாப்பிட்டாலும், அனைத்தும் தோலுக்கு அடியில் சதைத் திரட்சியாக அடுக்கடுக்காக ஒளித்து வைக்கப்படும். பணத்தைச் சுருட்டி சுவிஸ் வங்கியில் ஒளித்து வைப்பது போல, சிலரது உடம்பு சுருட்டி சுருட்டி உடல் வங்கியில் ஒளித்து வைத்துக் கொள்ளும்! சிலரின் உடம்பு, எரித்துப் பொசுக்கி விடும்; சதை விழாது. எனவே, நம் உடலின் இயல்பு என்ன என்பது கண்டறிவதே முதல் வேலை. நமது வேலைப் பளு மற்றும் வேலையின் இயல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப சாப்பிடுவது இரண்டாவது கடமை.

வயிறு வளர்த்தவர்களை, 'போலீஸ்கார தொந்தி' என கேலி செய்கிறோம். அதிக நேரம் நின்றபடியே வேலை செய்பவர்கள், சாதாரணமாகச் சாப்பிட்டா லும் வயிறு முன் தள்ளிவிடும். அதிக நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்தாலும் இடுப்பைச் சுற்றி வட்டம், மாவட்டம் என்று சதை தடித்து விடும் வாய்ப்பு உண்டு. எனவே, வேளைக்கு ஏற்ற சாப்பாடு; வேலைக்கு ஏற்ற சாப்பாடு& ஆகிய இரண்டுமே கவனிக்கத் தக்கது.

மூன்றாவதாக... பிடித்ததைச் சாப்பிடுவது. ருசி அதிகமாக இருந்தால், கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவதையும் இலவசமாகவோ அல்லது பிறர் செலவில் கிடைக்கிறது எனில், பரிமாறுபவரே பயப்படும்படி சாப்பிடுவதையும் அறவே நிறுத்த வேண்டும். 'அற்றால் அளவறிந் துண்க' எனும் குறள் நெறியை மந்திரமாக ஏற்று செயல்பட வேண்டும்.

காட்டில், மிருகக்காட்சிசாலையில்... பசி இல்லா மல் சாப்பிடும் மிருகம் ஒன்றைக்கூட நீங்கள் பார்க்க

முடியாது. மிருகங்கள், பசி இல்லையெனில் உணவைத் தொடவே தொடாது. பசியே இல்லாமல் சாப்பிடும் அதிசய பிராணி மனிதன் மட்டுமே!

சாப்பிடுவதற்கு முன் ஒரு விஷயம்...

1. இதை அவசியம் சாப்பிட வேண்டுமா?
2. இப்போது சாப்பிட வேண்டுமா?
3. இவ்வளவு சாப்பிட வேண்டுமா?
4. இப்படி & இந்தப் பக்குவத்தில்தான் சாப்பிட வேண்டுமா?

_ இந்த நான்கு கேள்விகளுக்கும் 'ஆம்' என்று பதில் தந்து விட்டு சாப்பிடுபவர்களை மந்தம், மன வருத்தம், மருத்துவம், மயானம் (மரணம்) ஆகிய நான்கும் நெருங்குவதே இல்லை.

சரியான உணவைத்தான் சாப்பிடுகிறோம் என்பதற்கான அளவுகோல் எது? எந்த உணவை

சாப்பிட்ட பிறகும் அதிக வேலை பார்க்கும் ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் அடைகிறீர் களோ... அந்த உணவே உங்களுக்கான உணவு! சாப்பிட்ட களைப்பு இன்றி கூடுதலாக பணியாற்ற முடிந்தால், அதுவே சரியான உணவு.

எல்லோருக்கும் ஏற்ற, சரியான... ஒரே உணவு

என்று எதையுமே சொல்ல முடியாது. ஒருவருக்கு

ஒத்துக்கொள்ளும் உணவு, பிறருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, தனக்கு உகந்த உணவு என்ன என்பதை அறிந்து கொள்வதே நமது முதல் கடமை! உடனே நீங்கள், 'அச்சச்சோ... சுவையே இல்லாமல் சாப்பிடச் சொல்கிறானே...' என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ருசி என்பது முக்கியம்; மறுப்பதற்கு இல்லை.

ரசிகமணி டி.கே.சி. ஒருமுறை டெல்லி சென்றிருந் தார். அந்தக் காலத்தில் வடக்கே அரிசி கிடைப்பது மிகவும் கடினம். ஆகவே பகலிலும் இரவிலும் சப்பாத்தியே அவருக்குத் தரப்பட்டது. பிறகு அவர் தமிழகம் திரும்பியதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சப்பாத்தி

குறித்து இப்படி கிண்டலாகச் சொன்னாராம்: ''அதென்னய்யா உணவு... சப்பாத்தி தயாரிக்கவும் ரெண்டு கை தேவை; பிய்த்துத் தின்னவும் ரெண்டு கை தேவை!''

உடனே பத்திரிகை ஆசிரியர், ''அதுக்கு ஒரு சப்ஜி தருவார்களே... உருளைக்கிழங்கு மசாலா... அதைத் தொட்டு சாப்பிட்டால், கஷ்டம் இருந்திருக்காதே'' என்றார்.

உடனே டி.கே.சி., ''உருளைக்கிழங்கு சப்ஜியோட தான் சாப்பிடணும்னா சப்பாத்தி என்ன உசத்தி?

உங்க நியூஸ் பேப்பரையே திங்கலாமே?! சொந்த பலத்தில் சப்பாத்தியால நிக்க முடியுமா? மெத்து மெத்துன்னு பஞ்சு மாதிரி இருக்கிற இட்லிக்குப் பக்கத்துல நெருங்கக்கூட முடியாது சப்பாத்தியால'' என்று பதிலடி கொடுத்தாராம்!

நீண்ட காலம் பழகிவிட்டதாலேயே உணவுப் பழக்கத்தில் நம்மால் மாற்றங்களைக் கொண்டு வர

முடிவதில்லை. ஆனால், ஆரோக்கியம் மற்றும் ஆனந்தம் குறித்து அக்கறை இருந்தால், மாற்றங் களைத் தாராளமாகக் கொண்டு வர முடியும்.

அரபுக் கதை ஒன்று: கண்ணில்லாத ஒருவர் தடியை ஊன்றியபடி, பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டார். இவர் மீது கருணை கொண்ட ஒருவர், பயணத்தில் உதவியபடி வந்தார்.

அது குளிர்காலம்! பனி மழை பெய்தது. இருவரும் அங்கிருந்த பழைய சத்திரம் ஒன்றில் தங்கினர். அதிகாலையில் பார்வையற்றவர் எழுந்து, தனது கைத்தடியை தேடினார். நாலாபுறமும் துழாவிய போது, வளைந்தும் நெளிந்துமாக வழுவழுப்பான தடி ஒன்று கையில் அகப்பட்டது.

வேலைப்பாடு மிக்க கைத்தடி ஒன்று கிடைத்து விட்டதாக பார்வையற்றவர் மகிழ்ந்தார். உடன் வந்தவர், அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை, தடியால் தட்டி எழுப்பினார் பார்வையற்றவர். உறக்கத்தில் இருந்து கண் விழித்தவர், பார்வையற்றவரின் கையில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். அவர் கையில் இருந்தது தடியல்ல... பாம்பு. குளிரில் விறைத்து மரக் கட்டை போல் கிடந்தது அது!

பார்வையற்றவரோ... பாம்பைக் கைத்தடி என நினைத்து, அதை சந்தோஷத்துடன் தடவிக் கொண்டே இருந்தார். உடன் வந்த ஆசாமி பதறிப் போய், ''முதல்ல அந்த சனியனை

தூக்கி எறி. அது தடியல்ல... பாம்பு'' என்று அலறினார். உடனே பார்வையற்ற மனிதர், ''ஏன் இப்படி பொய் சொல்றே? அழகான தடி எனக்குக் கிடைச்சிருச்சுன்னு உனக்குப் பொறாமை. நான் தூக்கி எறிஞ்சதும் நீ எடுத்துக்கலாம்னு நினைக்கறே?'' என்றாராம்.

உடன் வந்த ஆசாமி தலையில் அடித்துக் கொண்டார். ''உளறாதே... இது கொடிய விஷம் கொண்ட பாம்புதான். குளிர்ல விறைச்சுப் போய் வெறும் கட்டை யாகிக் கிடக்குது. கொஞ்ச நேரத்துல உணர்வு வந்ததும் உன்னைக் கடிச்சிரும்'' என்று அவர் சொல்ல... அவரின் நட்பையே முறித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் பார்வையற்ற ஆசாமி. சிறிது நேரத்தில் விடிந்தது; சூரியன் உதித்தது. வெயில் சூடு பட்டு, உணர்வு திரும்பி இயல்பு நிலைக்கு வந்தது பாம்பு. தம்மை வருடிக் கொடுத்து, ஆனந்தப்பட்ட அந்த பார்வையற் றவரை எமலோகத்துக்கு அனுப்பியது.

இந்தக் கதையின் தத்துவம் என்ன? நமது பழக்கங்

களே பாம்பு. அந்த விழியற்றவர்தான் நாம்! வழிகாட்டி உதவியவர், விழிப்புற்றிருக்கும் ஞானி.

நமது பழக்கங்களை விடச் சொல்கின்றனர் ஞானிகள். தூக்கி எறியுங்கள் என்று அறிவுறுத்து கின்றனர். ஆனால், அதை ஏற்காமல், அவர்களையே எதிரிகளாக

எண்ணுகிறோம்; எமலோகம் போகிறோம். இந்த அசட்டுத்தனம் ஏன்? விழிப்புற்றவர்களின் வழி காட்டுதலை ஏற்கலாமே?

பழம்பெருமை பேசும் பலரும், 'ஒரு வேளை உண்பவன் யோகி; இரு வேளை உண்பவன் போகி; மூன்று வேளை உண்பவன் ரோகி; நான்கு வேளை உண்பவன் துரோகி' என்று வசனம் பேசுவர். ஆனால்,

ஒரே வேளையில் நிறைய்ய சாப்பிடும் நமது உணவு முறையே தவறானது

என்பதே என் வாதம்! உலகில் சர்க்கரை நோயின் தலைமைச் செயலகமாக இந்தியா மாறியிருப்பதற்கு மூல காரணமே இதுதான்! திட உணவு, திரவ உணவு, முளை கட்டிய பயறு முதலான உணவை கொஞ்சமாக, ஆறு வேளைகளாகப் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிற உணவுத் திட்டம் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். போகிற இடத்தில் எல்லாம் கொடுக்கிறார்களே என்று சாப்பிட்டால், ஆபத்துதான்!

உடல் என்பது விலைமதிப்பற்ற கருவி! அது நமது சத்ருவும் அல்ல... மித்ருவும் அல்ல! அது ஒரு ஒழுங்குத் திட்டம். அதை நாசப்படுத்துவது நல்லதல்ல. உடல் மீது இரக்கம் கொள்ளுங்கள்; அதைச் சங்கடப்படுத்தாதீர்கள். பிறரிடம் அன்பு காட்டுவது

எவ்வளவு அவசியமோ, அதுபோன்று நம் மீது நாமே அன்பு காட்டுவதும் அவசியம்!

உணவைக் கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல உடம்பு; புதைகுழியும் அல்ல; பரமாத்மாவின் புனிதமான இறை இல்லம். எனவே, உடலை நேசியுங்கள்... முடிந்தால் பூசியுங்கள்!

கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்
கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்


உடுப்பி ஸ்ரீவிஜயீந்திர தீர்த்த சுவாமிகள், திருவையாறில் தான் சந்தித்த அதிசய நிகழ்வு ஒன்றை, 1940-ஆம் ஆண்டில் விவரித்துள்ளார்...
"கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் வசித்த 16 வயது வாலிபன் திடீரென இறந்து விட்டான்.

இவனது திடீர் மரணம், அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை உருவாக்கி விட்டது. பெற்றவர்களும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அழுது புலம்பியபடி இருந்தனர். அப்போது இளம் துறவி ஒருவர், அந்த துக்க வீட்டைக் கடந்து செல்ல நேரிட்டது. துறவியைக் கண்ட துக்க வீட்டார், ஓடிச் சென்று

அவரிடம், வாலிபனது சாவு குறித்து புலம்பினர். இதைக் கேட்ட அந்த துறவி, வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையின் சாறை, பிணமாகக் கிடந்தவனது கண்களில் துப்பினார். என்னே அதிசயம்?!


செத்துப் போனவன், தூங்கி எழுந்திருப்பது போல் விழித்தெழுந்தான். துக்க வீட்டார் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்தனர். அந்த துறவியை கடவுளை விட மேலானவராக எண்ணி வணங்கினர்."

- இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் உடுப்பி சுவாமிகள். இறந்த வாலிபனுக்கு உயிர் கொடுத்த அந்தத் துறவி- கோடகநல்லூர் ஸ்ரீசுந்தர சுவாமிகள்.

1831-ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ

நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில்... திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அவதரித்தார் ஸ்ரீசுந்தர

சுவாமிகள். ஸ்ரீவத்ஸ கோத்திரத்தைச் சேர்ந்த யக்ஞேஸ்வர சாஸ்திரிகள்- காமாட்சி அம்மாள் தம்பதியின் 2-வது மகனாகப் பிறந்தார். மூத்தவன்- குப்பாணி சிவம்.

அப்பய்ய தீட்சிதரின் பரம்பரையில் அவதரித்தவர் சுந்தர சுவாமிகள். இவர் பிறந்த ஒண்ணரை ஆண்டிலேயே இவரின் பெற்றோர் இறந்தனர். எனவே, தாய்மாமனான வேங்கடசுப்பய்யர்தான் சுந்தரத்தை வளர்த்து வந்தார். சிறுவர்களான குப்பாணி சிவம் மற்றும் சுந்தரம் இருவரும் கல்வி பயிலுவதற்காக, கங்கைகொண்டானில் இருந்து பத்தமடைக்கு இடம் பெயர்ந்தனர். சுந்தரத்துக்கு ஐந்து வயதில் அட்சர அப்பியாசமும் ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது. பத்தமடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யயனம் பயின்ற சுந்தரம், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கினான். இவனது திறனைக் கண்டு வியந்த ஊர்க்காரர்கள், 'தெய்வீகப் பிறவியப்பா சுந்தரம்! இப்படியரு புள்ள நம்ம ஊர்ல வளர்றதுக்கு நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்' என்று பெருமிதம் கொண்டனர்.

சிவ பூஜை செய்வதில் ஈடுபாடு கொண்ட சுந்தரம், தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வந்தான். மேலும் யோகம், தவம் ஆகியவற்றிலும் கரை கண்டிருந்தான் சுந்தரம்.

நெல்லை மாவட்டம் அடைச்சாணி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பய்யரின் மகள் ஜானகிக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது சுந்தரத்துக்கு வயது பதினாறு! தன்னுடைய மாப்பிள்ளையின் சிவ பக்தியைக் கண்டு வியந்த ராமசுப்பய்யர், சிவ பூஜைக்கான நியமங்கள் சிலவற்றை அவருக்கு போதித்தார். அத்துடன், நெடுநாளாக தான் பூஜித்து வந்த பாணலிங்கம், ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆகிய விக்கிரகங்களையும் வழங்கினார்.

இந்த நிலையில், அடைச்சாணியில் உள்ள விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்ற சுந்தரம், இவரை தமது குருவாக வும் ஏற்றார். இதையடுத்து பத்தமடைக்கு திரும்பிய சுந்தர சுவாமிகள், தன் வாழ்க்கை முறையை மாற்றலானார். கணவரின் எண்ணத்துக்கு தக்கபடி சுவாமிகளின் துணைவியார் ஜானகியும்

தியாகங்கள் சிலவற்றைச் செய்தார். பின்னர், தனது குருவின் ஆணைப்படி துணைவியார் ஜானகிக்கு மந்திரங்கள் உபதேசித்து, அவரை தனது முதல் சீடராக ஏற்றார். துணைவியாரின் விருப்பமும் இதுவே! இதையடுத்து சில ஆண்டுகளில், சுவாமிகளை அறிந்த அன்பர்கள் பலர், இவருக்கு சீடர்களானார்கள்.

ஒருமுறை, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆலயங்களை தரிசிக்க யாத்திரை மேற்கொண்டார் சுவாமிகள். பயணத்தின்போது, 'சூத சம்ஹிதை' குறித்து உரை நிகழ்த்தினார் (சிவ பக்தி, சிவ பூஜை, ஆசனங்கள், அஷ்டமா ஸித்தி, அஷ்டமாயோகம் ஆகி யவை குறித்து சூத பவுராணிகர் அருளியதே சூத சம்ஹிதை!); சிவ பஜனை செய்தார்.புனித பூமியாம் காசிக்குச் சென்று, கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதர்-விசாலட்சுமி மற்றும் அன்னபூரணியை தரிசிக்க விரும்பிய சுவாமிகள், யாத்திரை புறப் பட்டார். மதுரை, திருச்சி, திருவையாறு, மாயவரம், சீர்காழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் முதலான தலங்களை தரிசித்து, அங்கு உள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கி, பின்னர் காசியை அடைந்தார்.

கங்கையில் நீராடினார்; ஆலயங்கள் பலவற்றையும் தரிசித்தார்; காசியில் உள்ள யோகிகள் பலரிடமும் உரையாடினார். அப்போது, இறை பலமும் எண்ணற்ற கலைகளும் கைவரப் பெற்ற மகா கணபதி

சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. அதுவும் எப்படி?

தொடர்ந்து ஆறு மாத காலம் நீருக்கு அடியிலேயே வசிக்கும் யோகப் பயிற்சியை அறிந்த மகா கணபதி சுவாமிகளை... அவர், கங்கை நதிக்குள் தவம் இருப்பதை அறிந்து, தானும் அங்கு சென்று சந்தித்தாராம் சுந்தர சுவாமிகள்! இருவரும்

பல அரிய தகவல்களை பரிமாறிக் கொண்டனராம்! மணிகர்ணிகா கட்ட படித்துறையில்... இந்த இரண்டு துறவிகளது கல் விக்கிரகங்களை இன்றைக்கும் தரிசிக்கலாம்!

காசியில் இருந்து நெல்லைச் சீமைக்கு திரும்பிய சுந்தர சுவாமிகள் பத்தமடை, கோடகநல்லூர், சுத்தமல்லி, கடையம் முதலான தலங்களுக்குச் சென்றார். தனது குரு, திருச்சமாதி அடைந்த அடைச்சாணிக்கும் சென்று தரிசித்தார். கடையத்தில் சேஷாசல தீட்சிதர் என்ப வரை சந்தித்த பின், வித்வத் சந்நியாசத்தைப் பெற்றார். அப்போது சுவாமிகளுக்கு வயது 21.

சுவாமிகள் ஒருமுறை, சுத்த மல்லியில் தங்கி இருந்தபடி தினமும் சொற்பொழிவாற்றி வந்தார். திரளென குவிந்திருந்த பக்தர்கள் இடையே வடமொழியில் ஸ்லோகங்கள் சொல்லி, அதற்கு அழகிய தமிழில் விளக்கமும் அளித்தார். கட்டுக்குடுமியும் பூணூலுமாய் சுவாமிகள் உபந்யாசித்து வந்தபோது, ஒரு நாள் திடீரென எழுந்து, உள்ளே சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்தார்.

அவரைக் கண்டு பலரும் அதிசயித்தனர். காரணம்- சுவாமிகளது தலையில் கட்டுக் குடுமியும் இல்லை; திருமேனியில் பூணூலும் இல்லை. சட்டென அனைத்தையும் துறந்து விட்டு வந்தவர், தன் உபந்யாசத்தை தொடர்ந்தார். இதன் பிறகுதான் சுவாமிகளின் துறவு வாழ்க்கை முழுமை அடைந்த தாகக் கருதினர் அவரது சீடர்கள்.தனது 23-ஆம் வயதில், நெல்லை சங்கர மடத்தில் சில காலம் வசித்த சுவாமிகள், அங்கு எதிர்பார்த்த அமைதி நிலை கிடைக்கப் பெறாததால், நெல்லையை அடுத்த கோடகநல்லூரை அடைந்தார். இங்கு, தாமிரபரணிக் கரையோரத்தில், நெடுநெடுவென வளர்ந்திருக்கும் நாணல் மற்றும் மூங்கில் புதருக்குள் சென்று, எவரும் தன்னை அணுகமுடியாதபடி நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். சில தருணங்களில் அப்படியே சமாதி நிலையை எய்தி விடுவாராம் சுவாமிகள். அப்போது சுவாமிகளுக்கு உணவு எடுத்து வரும் சீடர்கள், சுவாமிகளைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல், உணவுடன் திரும்பிச் செல்வார்களாம்!

ஆனால், பக்தனின் பசியை பரமன் பொறுப்பாரா? அன்ன ஆகாரம் எதுவும் இன்றி, சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது, ஆதிசிவனே அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றி பசியாற்றியதுடன், சுந்தர சுவாமிகளுக்கு தரிசனம் தந்தும் அருளியுள்ளாராம்!

கோடகநல்லூரில் உள்ள சங்கர மடத்தில் தங்கி, சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார். யோகிகளுக்கே உண்டான பரிபக்குவ நிலையை அடைவதற்கு கோடகநல்லூர் வாசம் உதவியதால், பின்னாளில் இவர், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் ஆனார்.

ஒரு தீபாவளி தினம்! காஞ்சிபுரம் கம்பை நதிக் கரையில் உபந்யாசம் செய்தார் சுந்தர சுவாமிகள். ராமச்சந்திர மேத்தா உள்ளிட்ட அடியார்கள் சிலரும் திரளான பக்தர்களும் அங்கு இருந்தனர். உணவு, சாஸ்திரம் குறித்த விளக்கங்களை தெளிவுற விவரித்த சுவாமிகள், "பரிசுத்தமான ஒவ்வொருவரது வலது உள்ளங்கையிலும் அக்னி பகவான் ஆட்சி செலுத்துகிறார். எனவே நெருப்பின் தாக்கம் உள்ளங்கையில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஆகவே, உள்ளங்கையில் படாமல் உணவைச் சாப்பிடுவதே உத்தமம்" என்றார். இதை ராமச்சந்திர மேத்தா கூர்ந்து கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், காமாட்சியம்மன் ஆலய அர்ச்சகரான சுப்ரமண்ய பட்டர், தெய்வ அலங்காரம் மற்றும் நைவேத்திய தயாரிப்புக்காக புஷ்பங்கள், அரிசி மற்றும் ஒரு கொட்டாங்கச்சியில் நெருப்புத் துண்டுகள் ஆகியவற்றுடன் அங்கு வந்தார். திடீரென மழை பெய்யவே, கொட்டாங்கச்சியில் இருந்த நெருப்புத் துண்டங்கள், மழையில் நனைந்து அணைந்தது. இது, சுவாமிகளது திருவிளையாடல் என்பதை அப்போது எவரும் உணரவில்லை.

சுவாமிகளை வணங்கிய சுப்ரமண்ய பட்டர், பக்தர் எவரையேனும் அனுப்பி, நெருப்புத் துண்டங்கள் கிடைக்க உதவும்படி வேண்டினார். உடனே சுவாமிகளும் அங்கு இருந்த ஆவுடையப்ப பிள்ளை என்பவரை அழைத்து, அடுக்களைக்குச் சென்று நெருப்புத் துண்டங்களை எடுத்து வரும்படி உத்தரவிட்டார். அப்போது ராமச்சந்திர மேத்தா வுக்கு வந்தது ஒரு யோசனை! மெள்ள சுவாமிகளை நெருங்கி... "பூஜைக்கு தேவையான நெருப்பை, தங்களது உள்ளங்கையில் இருந்து எடுத்துத் தர முடியாதா சுவாமி?" என்று பவ்யமாகக் கேட்டார். அங்கு இருந்தவர்கள் அதிர்ந்தனர். 'சுவாமிகளையா சோதிப்பது?' என்று முணுமுணுத்தனர்.ராமச்சந்திர மேத்தாவைப் பார்த்துப் புன்னகைத்த சுவாமிகள், "தாங்கள் மேலே அணிந்திருக்கும் வஸ்திரத்தைத் தாருங்கள்" என்று வாங்கிக் கொண்டார். வஸ்திரத்தைத் தனது உள்ளங்கையில் பரபரவென தேய்த்தார். அவ்வளவுதான்! தகித்து எழுந்தது நெருப்பு. இதைக் கொண்டு, பூஜைக்குத் தேவையான அக்னி தயார் செய்யப்பட்டது. இதைக் கண்டு விதிர்த்துப் போன மேத்தா, சுவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவரை ஆசிர்வதித்த சுவாமிகள், "இது இறைவனின் விளையாடலப்பா! கலங்க வேண்டாம்" என்றார்.

சிருங்கேரி ஜகத்குரு மகாசந்நிதானம், ஒருமுறை திருநெல்வேலிக்கு விஜயம் செய்திருந்தார். சுந்தர சுவாமிகளைப் பற்றி அறிந்திருந்ததால், அவரை தான் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்தார் சிருங்கேரி சந்நிதானம். அத்துடன் தன்னைச் சந்திக் கக் கூடி இருந்த மக்கள் இடையே, "சுந்தர சுவாமிகள் ஓர் அவதார புருஷர்" என்று கூறி, அவரது பெருமைகளை விவரித்தார்.

சுந்தர சுவாமிகளது காலத்துக்குப் பிறகு வந்தவர்தான் எனினும் காஞ்சி மகா ஸ்வாமிகள், சுந்தர சுவாமிகள் குறித்து தன் பக்தர்களிடம் விவரித்துள்ளார். அப்போது, "ஆலயத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்து இறைப் பணியில் தங்களை பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள். இந்த கைங்கர்யத்தைத் தொன்று தொட்டு செய்து வந்தாலும் சமீப காலத்தில் இவர்களை அதிக அளவில் இறைப் பணியில் ஈடுபடச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சுந்தர சுவாமிகள். இவரது காலத்தில், திருமேனியில் திருநீறும் கழுத் தில் ருத்திராட்சமும் அணியாத நாட்டுக் கோட்டை செட்டியாரைப் பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு இவர்களுக்கு சிவபக்தியை புகட்டியவர் சுந்தர சுவாமிகள். இவரது உத்தரவை ஏற்று, சிவாலயங்கள் பலவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளனர்" என்று கூறியுள்ளாராம் காஞ்சி மகா சுவாமிகள். இந்தத் தகவல், சுந்தர சுவாமிகளது வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

செட்டி நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உபந்யாசம் செய்யும் போது, ஏகமுக ருத்திராட்சத்தின் மகிமையை எடுத்துரைப்பாராம் சுந்தர சுவாமிகள். இதைக் கேட்ட நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பலரும், ஏகமுக ருத்திராட்சத்தை அணியத் துவங் கினர். சுவாமிகளை குருவாக ஏற்று வணங்கி வரும் எண்ணற்ற அன்பர்கள், ஏகமுக ருத்திராட்சத்தை அணிந்திருப்பதைக் காணலாம்!

திருவையாறு பகுதியில் உள்ள ஸப்தஸ்தான ஆலயங்களுக்கு (திருவையாறு, திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம், திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பழனம், திருப்பூந்துருத்தி) 1872-ல் கும்பாபிஷேகம் செய்து வைத்தார் சுவாமிகள்.

வைகாசி மாதத்தில் ஒரே நாளில்... ஒரே நேரத்தில்... ஏழு ஆலயங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம்... ஏழு கோயில்களிலும் ஒரே நேரத்தில் அங்கு இருந்தாராம் சுவாமிகள்! இதை அறிந்த அவரின் சீடர்கள் உட்பட எண்ணற்ற பக்தர்களும் மெய்சிலிர்த்தனர்.

இந்தக் கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்த அந்தணர்கள், மதிய உணவுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சமையலில் ஈடுபட்டிருந்த அன்பர் ஒருவர் சுவாமிகளிடம் ஓடிவந்து, "உணவில் சேர்ப்பதற்கும் அந்தணர்களுக்கு பரிமாறுவதற்கும் நெய் இன்னும் வந்தபாடில்லை. என்ன செய்வது?" என்று தவித்தபடி கேட்டார். உடனே சுவாமிகள், "அவ்வளவுதானே...

கோயில் குளத்தில் இருந்து நான்கு குடங்களில் தண்ணீர் எடுத்து வா" என்றார்.

'நெய் கேட்டால் நீரை எடுத்து வரச் சொல்கிறாரே...' என்று அந்த அன்பர் குழம்பியபடி நின்றார். "அட... சீக்கிரம் எடுத்துட்டு வாப்பா. அந்தணர்கள் பசியில இருக்காங்க..." என்று அவரை விரட்டினார் சுவாமிகள். உடனே அன்பரும் நான்கு குடங்களிலும் குளத்து நீரை எடுத்து வந்து, சுவாமிகளுக்கு முன்னே வைத்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறியும் ஆவலுடன் அனைவரும் காத்திருந் தனர். கையில் கொஞ்சமாக திருநீறை எடுத்த சுவாமிகள், ஸ்ரீஐயாரப்பரை பிரார்த்தித்து, அந்த திருநீறை நான்கு குடங்களிலும் மெள்ள தூவினார். மறுகணம், குடங்கள் அனைத்திலும் கமகமத்தது நெய் வாசனை. அனைவரும் அதிசயித்துப் போனார்கள். இந்த நெய்தான் அன்றைக்குப் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து சில நிமிடங்களில், நெய்யை எடுத்து வந்து இறக்கினார் வியாபாரி. உடனே அன்பர் ஒருவரை அழைத்த சுவாமிகள், "இதில் நான்கு குட நெய்யை மட்டும் கோயில் குளத்தில் சேர்த்து விடுங்கள். இறைவன் கொடுத்ததை அவருக்கு திருப்பித் தருவதுதான் மரியாதை" என்றார். அதன்படியே, நான்கு குட நெய், குளத்தில் ஊற்றப்பட்டது.

இதே திருவையாறு கும்பாபிஷேகத்தின் போது, இன்னொரு சம்பவமும் நடந்தது. சுந்தர சுவாமிகளை எப்படியேனும் அவமானப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்தார். 'சுவாமிகளுக்கு என் அன்பு காணிக்கை' என்று சொல்லி, பொட்டலம் ஒன்றை சுவாமிகளுக்கு முன்பு வைத்தார்.

மெள்ள புன்னகைத்த சுவாமிகள், தனது திருக்கரத் தால் அந்தப் பொட்டலத்தைத் தொட்டார். பிறகு அந்த ஆசாமியிடம் பொட்டலத்தைப் பிரிக்கும் படி கூறினார். சுவாமிகளுக்கு அவமானம் நேரப் போவதாக மகிழ்ந்த அந்த ஆசாமி, பொட்டலத்தை திறந்தார். அதில்... சுவையான பழ வகைகள் இருந்தது கண்டு அதிர்ந்தார். ஏனெனில், பொட்டலத்தில் வைத்திருந்தது மாமிசமாயிற்றே...!

தை அமாவாசையின் போது (1864-ஆம் ஆண்டு) நெல்லை காந்திமதி அம்மன் கோயிலில் லட்சதீபம் ஏற்றுதல்; பொதிகை மலை தரிசனம்; குறுக்குத் துறை முருகப் பெருமானின் ஆலய விஜயம் உள்ளிட்ட

பணிகளை மேற்கொண்டார் சுவாமிகள். இதையடுத்து புதுக்கோட்டை ஒட்டுத் திண்ணை பரதேசி சுவாமிகளது விருப்பத்துக்கு இணங்க, புதுகைக்குச் சென்றார் சுவாமிகள்.

அப்போதுதான்... அந்தணர் அல்லாதோருக்கும் பெண்களுக்கும் முறைப்படி தீட்சை வழங்கினார். இங்கு தங்கியிருந்த வேளையில்... அரிமளம் சிவராமன் செட்டியார் மற்றும் புதுவயல் அழகப்ப செட்டியார் ஆகிய பக்தர்கள் இருவரும் சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்தனர்.

இதையடுத்து, பல தலங்களுக் கும் சென்றவர், மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கு சென்றபோது, அரிமளம் சிவராமன் செட்டியார் உட்பட பக்தர்கள் பலரும் உடன் சென்றனர். ரெட்டை மாட்டு வண்டிகளில் பயணம் செய்தவர்கள் திருமயத்தை அடைந்தபோது, அந்த அற்புதம் நிகழ்ந்தது.

எதிரே சாலையில் நின்றபடி, 'வண்டியை புதுக்கோட்டைக்குத் திருப்பு' என்று சொல்லி மறைந்தார் சுந்தர சுவாமிகள். வண்டிக்காரனுக்கோ குழப்பம்... 'என்னடா இது? வண்டில அசந்து தூங்கிட்டிருந்த சாமீ, திடீர்னு கீழே இறங்கி புதுக்கோட்டைக்குத் திருப்பச் சொல்றாரு?' என்று! பிறகு வண்டியைத் திருப்பி, மீண்டும் புதுக்கோட்டை நோக்கிச் செலுத்தினான். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சுவாமிகள், "இப்ப நாம எங்கேப்பா இருக்கோம்?" என்று கேட்க... "புதுக்கோட்டையை நெருங்கிகிட்டு இருக்கோம் சாமீ" என்று பதில் சொன்னான் வண்டிக்காரன்.

சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னது... புதுக்கோட்டைக்கா...? ராமேஸ்வரம் போகலையா?" என்று கேட்டார். உடனே வண்டிக்காரன், "என்ன சாமீ... நீங்கதானே வண்டிக்கு எதிர்ல நின்னு 'புதுக்கோட்டைக்கே போடா'னு சொன்னீங்க?" என்றான். ஆச்சரியப்பட்ட சுவாமிகள், "வண்டிலேருந்து நான் இறங்கவே இல்லியேப்பா..." என்று உறுதிபட தெரிவித்தார்.

பின்னர், திருமயத்தில் வண்டி எந்த இடத்தில் புதுகைக்கு திரும்பியதோ... அந்த இடத்துக்கு வெகு அருகில் பெரும் புயல் வீசியதாம்! மரங்கள் விழுந்து, வீடுகள் சரிந்து, சாலையில் சென்ற வண்டிகள் அனைத்தும் நிலை தடுமாறி கவிழ்ந்து விட்டன வாம்! ஆடு-மாடுகள் கூட நாசமாகி விட்டதாம்! மறுநாள்... விடிந்ததும் இந்த தகவல் தெரிந்தது. அப்போதுதான், சுவாமிகளது உருவத்தில் வந்து இறைவனே தங்களை காப்பாற்றி உள்ளான் எனும் உண்மையை அறிந்து அனைவரும் சிலிர்த்தனர்.

பின்னர், சுவாமிகளை அரிமளத்துக்கு அழைத்துச் சென்ற சிவராமன் செட்டியார், சிவாலய

கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான சத்திரம் முதலான பணிகளை செய்து முடித்தார்.

மதுரையில் உள்ள விபூதி மடத்தில் பக்தர்கள் மற்றும் சிஷ்யர்களுடன் சில நாட்கள் தங்கினார் சுவாமிகள். இவரின் சீடரான நாராயணசிவம் என்பவர், தண்ணீரில் அமர்ந்து யோக நிஷ்டை இருப்பதில் தேர்ந்தவர். எனவே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு வந்து, நீரின் மேல் யோக நிஷ்டையில் இருந்தார் நாராயணசிவம். இதைக் கண்ட அன்பர்கள் பலரும், அவரது யோக முறையை வியந்து அதிசயித்தனர். அதுவரை குளத்து நீரில் அமர்ந்தபடி யோகத்தில் இருந்த நாராயணசிவம், திடீரென மெள்ள மெள்ள நீருக்குள் மூழ்கினார். கரையில் நின்றவர்களுக்கு இவரது உடல் தெரியவே இல்லை. அங்கு இருந்த சுவாமிகளின் பக்தரான சுப்ரமண்ய குருக்கள் என்பவர், உடனே காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று, 'பொற்றாமரைக் குளத்தில் நாராயணசிவம் மூழ்கி விட்டார். எனவே அவரது உடலை மீட்டுத் தாருங்கள்' என்று தெரிவித்தார். இதையடுத்து பொற்றாமரைக் குளத்துக்குள் இறங்கி, தேடும் பணியில் ஈடுபட்டனர் காவல்துறையினர். இரண்டு நாளாகியும் உடல் கிடைக்கவே இல்லை.

மூன்றாம் நாள்! அங்கு வந்தார் சுந்தர சுவாமிகள். "நாராயணசிவத்தின் உடலை எப்படியேனும் மீட்டு,

தென் கரையில் உள்ள விபூதி விநாயகர் அருகே கொண்டு வந்து வைத்து விடுங்கள்' என்று காவல் துறையினரிடம் தெரிவித்தார் சுவாமிகள்.

இறந்த நாராயணசிவத்தை உயிர்ப்பித்து விடும்

எண்ணத்தில் இருக்கிறார் சுவாமிகள் என்பதை புரிந்து கொண்ட போலீசாரும் கோயில் ஊழியர்களும்

சுவாமிகளை கேலி செய்தனர். 'தண்ணீரில் மூழ்கி

இறந்து மூணு நாளாச்சு. உடலையே இன்னும் கண்டுபிடிக்க முடியலை. இவர் உயிர்ப்பிக்கப் போறாராமா?' என்று கிண்டல் செய்தனர். இருப்பினும், 'நடப்பதைத்தான் பார்ப்போமே.' என்று குளத்தில் இறங்கி தேட எத்தனித்தனர். அப்போது, திடீரென நீரில் உடல் மிதந்தது கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். பின்னர், நாராயணசிவத்தின் உடலை விபூதி விநாயகர் சந்நிதிக்கு அருகே கொண்டு வந்து கிடத்தினர்.

சுவாமிகள், இறைவனை பிரார்த்தித்தபடி, நாராயணசிவத்தின் உடல் முழுவதும் திருநீறை அள்ளி பூசினார்; சடலத்தின் வலது காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார்; உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெள்ள தடவிக் கொடுத்தார். அவ்வளவுதான்... மூன்று நாட்களாக சடலமாகக் கிடந்த நாராயணசிவம், உயிர்த்தெழுந்தார். சுந்தர சுவாமிகளின் திருப்பாதங் களில் விழுந்து வணங் கினார். சுவாமிகளது அற்புதத்தை அறிந்து, அங்கு இருந்தவர்கள் அவரை வணங்கினர்.

இதையடுத்து, மதுரை யில் இருந்து திருச்சி, திருவையாறு, தஞ்சாவூர், கபிஸ்தலம், சென்னை முதலான தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்த சுவாமிகள், பின்னர் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை 1873-ஆம் ஆண்டு நடத்திக் கொடுத்தார்.

தன் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார் சுவாமிகள். இவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் - தான் ஸித்தி அடைந்த அரிமளத்தில் உள்ள ஆலயம்! இறுதியாக நடத்திய கும்பாபிஷேகம், இவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள ஆலயம்.

தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார் சுந்தர சுவாமிகள். அதன்படி 1878-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி (ஐப்பசி 6) கிருஷ்ண பட்ச தசமி அன்று ஸித்தி அடைந்தார் சுவாமிகள். அரிமளம் சிவராமன் செட்டியாரும் மற்ற சீடர்களும், சுவாமிகளது இறுதி காரியங்களை செய்து முடித்து, சுவாமிகளது சமாதியின் மேல் அவர் பூஜித்து வழிபட்ட பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர்.

அரிமளத்தில் உள்ள ஸ்ரீசுந்தர சுவாமிகளின் அதிஷ்டானத்தைத் தரிசிப்போமா?

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு உட்பட்ட பொன்னமராவதி- கொன்னையூர் முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் வருகிறது இந்த அதிஷ்டானம்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து தேனிப்பட்டி மற்றும் ஏம்பல் செல்லும் பேருந்துகள் அரிமளம் வழியாகச் செல்லும். தவிர, அரிமளத்துக்கு நகரப் பேருந்து வசதியும் உள்ளது. அரிமளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சற்றுத் தொலைவு நடந்தால், சுவாமிகளின் அதிஷ்டானத்தை அடையலாம். முகப்பில் ஒரு இரும்பு கேட். உள்ளே நுழைந்தால், நந்தவனம்.

கருவறை, உள்பிராகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வெளிப் பிராகாரம் என முழுவதும் கருங்கல் திருப்பணியாய் அமைந்து, விஸ்தாரமாகவும் உள்ளது. கருவறையில் சுவாமிகளின் அதிஷ்டானம்! சிலா வடிவில் உள்ள ஆவுடையாரின் மேல் சுவாமிகள் வழிபட்ட பாணலிங்கத்தை தரிசிக்கிறோம். இங்கு விபூதி அபிஷேகம் அடிக்கடி நடைபெறுமாம்! அதிஷ்டானத்தில், ஸ்ரீவிநாயகர், பின்பக்க கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வெளியே நாகர் ஆகிய சந்நிதிகளும் உண்டு.

தினமும் காலையில் சுமார் எட்டரை மணியளவில் அபிஷேகம் நடைபெறும். தவிர பௌர்ணமி அன்று மாலை 4 மணிக்கும், ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் தேய்பிறை தசமி ஆகிய நாட்களில் பகல் 11 மணிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதம் தேய்பிறை தசமி அன்று (பூச நட்சத்திரம்) குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமிகளின் உற்ஸவர் விக்கிரகம் வீதியுலா வரும்.

சுந்தர சுவாமிகள் இங்கு இருந்தபடி உலகமெங்கும் உள்ள பக்தர்களை இன்றைக்கும் காத்து வருகிறார் என்பது நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர் மட்டுமின்றி ஏனைய பக்தர்களது நம்பிக்கை!

படங்கள்: எஸ். சாய் தர்மராஜ், விபா

தகவல் பலகை


தலம் : அரிமளம்

சிறப்பு : ஸ்ரீசுந்தர சுவாமிகள் அதிஷ்டானம்
எங்கே இருக்கிறது?: புதுக்கோட்டையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது அரிமளம். அறந்தாங்கி மற்றும் திருமயத்தில் இருந்தும் சுமார் 22 கி.மீ. தொலைவுதான்.

எப்படிப் போவது?: புதுக்கோட்டையில் இருந்து 22, 27, 27ஏ மற்றும் ஜான்ஸி ஆகிய பேருந்துகளும், அறந்தாங்கியில் இருந்து 6, லதா, எஸ்.எம்.ஆர், ரங்கநாதன், பி.எல்.ஏ. ஆகிய பேருந்துகளும், திருமயத்தில் இருந்து 9-ஞி மற்றும் ராஜா ஆகிய பேருந்துகளும் அரிமளம் செல்கின்றன.

நடை திறந்திருக்கும் நேரம் :


காலை 7:30 - 12:00
மாலை 4:00 - 07:00
தொடர்புக்கு: நாகையா, செயல் அலுவலர்
மொபைல்: 94421 14167
கோவிந்தராஜன் (அர்ச்சகர்)
மொபைல்: 99441 02996

-