Monday, December 1, 2008

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல், பூசம்,
ஆயில்யம் வரை)

குடும்பம் : இதுவரை குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ம் இடமாகிய தனுர் ராசியில் சஞ்சரித்து வந்ததை நீங்கள் அறிவீர்கள். குருபகவான் 6-ம் இடத்திற்கு அதிபதியாக இருந்து, கோள்சாரத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய தனுசு ராசியில் சஞ்சரிக்கும்போது எத்தனை வருமானம் வந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளால் பணம் விரயமாகிவிடும் என்பதை மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. ஆதலால் சென்ற ஒரு வருடகாலமாகக் கட்டுக்கடங்காத செலவுகளாலும் கடன் உபாதைகளாலும் கடக ராசி அன்பர்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். அந்நிலை குருபகவானின் மகர ராசி சஞ்சார காலத்தில் அடியோடு மாறிவிடும். வருமானம் உயரும். கட்டுக்கடங்காமல் இருந்துவந்த வீண் செலவுகள் இனி இராது. கடன் தொல்லைகள் குறையும். உங்கள் ராசிக்கு மகரம் சப்தம ஸ்தானமாக இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமையும், அன்னியோன்யமும் அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டுவந்த ஒற்றுமைக் குறைவு நீங்கும். கடன் தொல்லைகள் குறைவதை அனுபவத்தில் பார்க்கலாம். ராகுவின் மகர ராசி நிலையினால் பாதிக்கப்பட்டிருந்த உங்கள் மனைவியின் உடல்நிலையில் இனி சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மகரம் குருவிற்கு நீச்ச வீடாக இருந்தாலும்கூட கடக ராசி அன்பர்களுக்கு அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்கு குருபகவான் நன்மையைத்தான் செய்வார். ஆனால் அந்த நன்மை அளவோடு இருக்கும் என்பதைத்தான் குருவின் நீச்சத்துவம் குறிப்பிடுகிறது.

பொருளாதாரம் : மேலே கூறியுள்ளபடி பொருளாதாரத்தில் மிகச் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை ஓரளவு தீர்ப்பதற்குக் கிரகநிலைகள் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிதிநிலைமையைச் சீர்படுத்திக்கொள்ள தக்க தருணம் இது.

ஆரோக்கியம் : கடக ராசிக்கு தனுர் ராசி ரோக ஸ்தானமும்கூட. ஆதலால் குருவின் தனுர் ராசி சஞ்சார காலத்தில் அடிக்கடி ஏதாவது ஓர் உடல் உபாதை அல்லது ஆரோக்கியக் குறைவு உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருந்திருக்கும். இந்நிலை இப்போது மாறி உடல்நலனில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். நிரந்தர நோய்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அன்பர்களுக்குச் சிறந்த நிவாரணம் ஏற்படுவது உறுதி.

உத்தியோகம் : உங்கள் ஜென்ம ராசிக்கு குருபகவானின் சுபப்பார்வை கிடைப்பதால் பலருக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளதைக் கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றமும் ஏற்படக்கூடும். வெளிநாடு சென்று வேலை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமிருப்பின் அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். தாற்காலிக ஊழியர்கள் பணியில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்யும் கடக ராசியினருக்கு நல்ல வேலை கிடைக்குமென பாக்கிய, தொழில், லாப ஸ்தானங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தசா, புக்திகள் அடிப்படையில் ஒரு சிலருக்கு வெளிநாடு சென்றுவரும் யோகமும் அமைந்துள்ளது.

தொழில் : கடக ராசியில் பிறந்துள்ள தொழில்துறை அதிபர்களுக்குத் தற்போது நிகழும் குருபகவானின் ராசி மாற்றம் சிறந்த பலன்களைத் தரவுள்ளது. படிப்படியாக உற்பத்தியை அதிகரிப்பதற்குக் கிரகநிலைகள் அனுகூலமாக உள்ளன. அரசாங்க அதிகாரிகளின் தொல்லைகள் இனி இராது. ஏற்றுமதி, இறக்குமதித் துறைகளில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவிகரமாக முக்கியக் கிரகங்கள் சஞ்சரிப்பதால் குருபகவானின் இந்த ராசி மாற்றம் உங்களுக்குப் பல நன்மைகளை அளிக்கவுள்ளது.

வியாபாரம் : விற்பனை அதிகரிக்கும். லாபம் பெருகும். நியாயமில்லாத போட்டிகள் இனி படிப்படியாகக் குறையும். நிதிநிறுவனங்கள் தக்க தருணங்களில் முன்வந்து உதவி செய்யும்.

கலைத்துறையினர் : புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். அதனால் வருமானம் பெருகும். புகழ் ஓங்கும். சென்ற காலத்தில் நடித்து, முடித்துக்கொடுத்த படங்களுக்காக இதுவரை வசூலாகாத பாக்கிப் பணம் சிறிது முயற்சியினால் இப்போது தவறாது கிடைக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு மகரம் சப்தம ஸ்தானமாக இருப்பதால் இதுவரை திருமணமாகாமல் இருந்த நடிக நடிகையருக்கு இப்போது திருமணம் நடைபெறும்.

அரசியல் துறையினர் : உங்கள் ராசியை குருபகவான் தனது சுபப்பார்வையால் (7-ம் பார்வை) பலப்படுத்துவதால் மனஅமைதியும், ஒற்றுமையும் அளிப்பார் குரு. மேலிடத் தலைவர்களின் ஆதரவு பெருகும். கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பார்கள். சிறிது முயற்சி செய்தீர்களானால்போதும். தேர்தலில் நிற்பதற்கு `டிக்கெட்' கிடைக்கும். இது ஓர் அதிர்ஷ்டகரமான சந்தர்ப்பம் என்பதையே குருபகவானின் தற்போதைய மகர ராசி மாறுதல் எடுத்துக்காட்டுகிறது.

மாணவமணிகள் : வித்யா ஸ்தானம் மற்றும் வித்யாகாரகரின் நிலை, குருபகவானின் நிலை ஆகிய மூன்றும் சுபபலனை அளிக்கக்கூடிய நிலையில் சஞ்சரிப்பதால் மாணவமணிகளுக்குப் படிப்பில் உற்சாகமும், ஆர்வமும் மேலிடும். கிரகிப்பு சக்தியும், ஞாபகத்திறனும் ஓங்கும். கல்வி மட்டுமின்றி, விளையாட்டுகள், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றிலும் நீங்கள் முன்னிலையில் நிற்பீர்கள். அடுத்த ஆண்டு உங்கள் விருப்பத்திற்கேற்ப இடம் கிடைக்கும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழித்து வளர்ந்து அமோகமான விளைச்சலைக் குறைவில்லாமல் உங்களுக்கு வரும் ஒரு வருட காலத்திற்கு அளிக்கப்போகிறது என்பதைத்தான் தற்போதைய கிரகநிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்காட்டுகின்றன. இதுவரை படாதபாடு படுத்திவிட்ட கடன் தொல்லைகள் படிப்படியாக நிச்சயமாகக் குறையும். அரசின் ஆதரவை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஜெனனகால கிரகநிலைகளும், தற்போதைய தசா, புக்திகளும் அனுகூலமாக இருந்தால் அத்தகைய கடக ராசி அன்பர்களுக்குப் புதிய விவசாய நிலம் வாங்குவதற்கும் யோகம் அமைந்துள்ளது. ஏனெனில் கடக ராசியினருக்கு குரு பாக்கியாதிபதியுமாகிறார்.

பெண்மணிகள் : குருபகவானின் இந்த மகர ராசி மாறுதல், குறிப்பாக பெண்மணிகளுக்குப் பல நன்மைகளை அளிக்கவுள்ளது என உறுதியாகக் கூறமுடியும். பெண்மணிகளுக்குப் பணவசதி அதிகரிப்பதால் குடும்பச் செலவுகளைக் கவலைப்படாமல் சமாளித்துவிட முடியும். முயன்றால் சேமிப்பிற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதுவரை உங்கள் நலன்களைப் பாதித்து வந்த ராகுவினால் ஏற்பட்ட கெடு பலன்கள் குருபகவானின் சேர்க்கையால் பெருமளவில் குறையும். இதுவரை குருபகவான் அனுகூலமில்லாத கோள்சார நிலையில் சஞ்சரித்து வந்ததால் கணவருடன் ஏற்பட்டுவந்த (கணவர் கடக ராசியானால் மனைவிக்கும், மனைவி கடக ராசியானால் கணவருக்கும்) ஒற்றுமைக்குறைவு அடியோடு நீங்கிவிடும். சில கடக ராசிப் பெண்களுக்குக் குழந்தைப் பாக்கியம் ஏற்படுவதற்கும் கிரகநிலைகள் அனுகூலமாக உள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் சிறந்த நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

அறிவுரை

ராகுவைத் தவிர மற்ற கிரகநிலைகள் சுபத்துவமான பாதையில் சஞ்சரிப்பதால் வரும் ஒரு வருட காலத்திற்கு நற்பலன்களே அதிகமாக இருக்கும். மனதில் நிம்மதி ஏற்படும். சில பரிகாரங்களினால் இத்தகைய நன்மைகளை அதிகரித்துக்கொள்ளலாம்.

பரிகாரம்

கோள்சார விதிகளின்படி கடக ராசிக்கு சப்தம ஸ்தானமாகிய மகரத்தில் குருபகவான் சஞ்சரிப்பது நன்மைகளை அளிக்கக்கூடிய சஞ்சாரம்தான். இருப்பினும் மகரம் குருவுக்கு நீச்ச ராசியாக இருப்பதால் குருவினால் ஏற்படும் நன்மைகள் சற்று குறைவாகவே ஏற்படக்கூடும். இதனை சரிசெய்வதற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தவறாது நெய்தீபம் ஏற்றி வந்தால் அந்த நீச்சத்துவம் கண்டிப்பாகக் குறையும்.

மேலும் புண்ணிய நதிகளில் நீராடுவது, அருளாளர்கள் தரிசனம், ஏழைகள், வறியவர்கள் ஆகியோருக்கு அளிக்கும் தானம் ஆகிய புண்ணியச் செயல்களால் குருபகவானின் பலவீனத்தைப் போக்கிக்கொள்ள முடியும். இதுதவிர தினமும் ஒரு சர்க்கம் சுந்தரகாண்டம் படிப்பதாலும் குருபகவான் திருவுள்ளம் மகிழ்ந்து நற்பலன்களை முழுமையாக அளித்தருள்வார்.

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம் : ஏழரைச் சனிக்காலத்தில் ஜென்மச்சனி நடைபெறும்போது குருபகவான் உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய மகரத்திற்கு மாறுகிறார். கோள்சார விதிகளின்படி 6_மிடத்தில் குருபகவான் சஞ்சரிப்பது நற்பலன்களைத் தராது. சிம்ம ராசியினருக்கு குரு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாக இருப்பதாலும், குருவுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் கிடையாது என்பதாலும், குருபகவானின் மகர ராசி சஞ்சார காலத்தில் சிம்ம ராசியினருக்கு இதுவரை அவரால் ஏற்பட்டுவந்த நன்மைகள் குறையுமே தவிர, மற்றபடி சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதே மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் வலியுறுத்தியுள்ள உண்மையாகும். திருமண முயற்சிகளில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு, அதன்பின்பே வெற்றி ஏற்படும். நெருங்கிய உறவினர்களின் தேவையற்ற தலையீடுகளினால் குடும்பத்தில் பிரச்சினைகளும், ஒற்றுமைக்குறைவும் உண்டாகும்.

குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஆகியோரால் பண விஷயங்களில் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளதால், அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு கொடுக்கல்-வாங்கலில் கண்டிப்பாக இருத்தல் அவசியமாகும்.

பொருளாதாரம் : எதிர்பாராத செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. கூடியவரையில் திட்டமிட்டுச் செலவு செய்வது நல்லது. அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு சிம்ம ராசி அன்பர்கள் கடன் கொடுப்பது, கடன் வாங்குவது ஆகிய இரண்டையும் தவிர்ப்பது மிக மிக அவசியமாகும். தொழிலதிபர்கள், வர்த்தகத் துறையினர் ஆகியோர் கூடியவரையில் கடன் வாங்காமலிருப்பது நல்லது. ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு 6-மிடத்தில் குரு சஞ்சரிக்கும்போது ஏற்படக்கூடிய கடன் பிற்காலத்தில் அடைபடுவது மிகவும் கடினம் எனப் பண்டைய நூல்களில் நம் மகரிஷிகள் அருளியுள்ளனர்.

ஆரோக்கியம் : ஜென்ம ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பதை சிம்ம ராசியினர் நினைவில் கொள்ளவேண்டும். அதே தருணத்தில் குருபகவானும் உங்கள் ராசிக்கு யோக ஸ்தானமாகிய மகரத்திற்கு மாறியிருக்கிறார். கடின உழைப்பினாலும், அலைச்சலினாலும் உடல் தளர்ச்சியும், பொறுப்புகளில் சோர்வும், மனதில் வெறுப்பும் உண்டாகும். உடல் ஓய்வுக்கு ஏங்கும். மனதிலும் காரணமில்லாத குழப்பமும், கவலையும் ஏற்படும். பெரிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.

உத்தியோகம் : பொறுப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். முன்னேற்றம் தடைபடாது. இருப்பினும் அளவிற்கு மீறிய உழைப்பினால் பணிகளில் உற்சாகம் குறையக்கூடும். புதிய சந்தர்ப்பங்கள், புதிய பொறுப்புகள் ஆகியவை உங்கள் திறமையைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை அளிக்கும். எதிர்கால முன்னேற்றத்திற்கு இவை மிகவும் உதவப் போகின்றன. மகரம், சிம்ம ராசிக்கு 6-மிடமாக அமைந்திருப்பதால், குருபகவானுக்கு ஏற்படும் நீச்சம் ஓரளவுக்கு பங்கமாகி விடுகிறது. ஆதலால் உழைப்பும், அலைச்சலும் கடுமையாக இருந்தாலும், அதற்கேற்ற வருமான உயர்வும், சம்பள சலுகைகள் அதிகரித்தலும் மனதில் உற்சாகத்தை அளிக்கும்.

தொழில் : உற்பத்தி அதிகரிக்கும். லாபம் உயரும். வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிக்கும். நிதிநிறுவனங்களினால் அவ்வப்போது சிரமங்கள் ஏற்படக்கூடும். கூடியவரையில் புதிய துறைகளில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். விஸ்தரிப்புத் திட்டங்களை ஒரு வருட காலத்திற்குத் தள்ளிப்போடுவது நல்லது. சூரியபகவானின் ராசியான சிம்மத்தில், தொழில்காரகரான சனி சஞ்சரிப்பதால் அரசாங்க அதிகாரிகளினால் தொல்லைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் `டென்ஷன்' ஆகாமல் சாதுர்யமாக நடந்துகொள்வது வீண் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

வியாபாரம் : தொடர்ந்து நல்லபடி நடக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். லாபம் குறையாது. சக கூட்டாளிகளினால் பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்பு சமரசத்தில் முடியும். 2009 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் நீதிமன்றம் செல்லவேண்டிய சாத்தியக்கூறு ஏற்படக்கூடும். புதிய வியாபாரங்களில் அடுத்துவரும் ஓராண்டிற்கு இறங்காமலிருப்பது நல்லது.

கலைத்துறையினர் : வாய்ப்புகள் குறையாது. வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். இருப்பினும் பலர் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும். வருமானம் நல்லபடி இருப்பினும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டதைவிட அதிக செலவு செய்தே தங்கள் தயாரிப்புகளை முடிக்கமுடியும். சக நடிகர்கள், நடிகைகள் ஆகியோரால் பிரச்சினைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து புதிய படங்களைத் தயாரிப்பது நல்லது. புதிய வாகனம் வாங்குதல், சொந்த வீடு வாங்குவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, பண விஷயங்களில் பிறருக்கு வாக்களிப்பது ஆகியவற்றை சிம்ம ராசி அன்பர்கள் அடுத்துவரும் ஓராண்டுக்குக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

அரசியல் துறையினர் : சிம்ம ராசியில் ஜெனித்துள்ள அரசியல் பிரமுகர்கள் அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு பேச்சிலும், செயலிலும்,ஆரோக்கியத்திலும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக அவசியமாகும். கூடியவரையில் கட்சித் தலைவரிடம் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியமாகும். தேர்தல் கூட்டணி வகுப்பதில் நிதானமும், விவேகமும் மிகவும் அவசியம். சிம்ம ராசியினர் மற்ற சில ராசியினரைப் போல அதிகமாகத் தவறு செய்யமாட்டார்கள். இருப்பினும், அவர்கள் ஒன்று அல்லது இரண்டு தவறுகள் எப்போதாவது செய்யும்போது அவற்றின் முடிவு மிகவும் விபரீதமாக இருக்கும்.

மாணவமணிகள் : ஜென்ம ராசியில் சனியும், 6-மிடத்தில் குருபகவான் நீச்ச ராசியில் சஞ்சரிப்பதாலும் கல்விக்கு அதிபதியான புதன் மிகவும் அனுகூலமாகச் சஞ்சரிப்பதாலும் மாணவமணிகளுக்கு படிப்பில் சிறந்த முன்னேற்றம் நீடிக்கிறது.

விவசாயத்துறையினர் : வயல் பணிகளில் கடுமையான உழைப்பு இருக்கப் போவதை இந்த குரு மாற்றம் எடுத்துக்காட்டுகிறது. மற்றபடி விைளச்சலும், வருமானமும் மிகவும் திருப்திகரமாக இருக்கும்.

பெண்மணிகள் : குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் உழைப்பு கடுமையாக இருக்கும். அதனால் அடிக்கடி உடலில் சோர்வும், சிறுசிறு உபாதைகளும் தோன்றும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள் அதிக உழைப்பினால் தங்கள் வேலையில் தவறுகள் செய்வதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால் கடமைகளில் சற்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அறிவுரை

அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்கு சிம்ம ராசி அன்பர்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்வது, தினமும் சரியான நேரத்திற்குச் சாப்பிடுவது, உறங்கச் செல்வது ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள உதவும். மேலும் பண விஜயங்களில் கண்டிப்பு மிகவும் அவசியம். மேலதிகாரிகளுடன் அலுவலக விஜயங்களைப் பற்றி விவாதிக்கும்போது பொறுமையும், பேச்சில் நிதானமும் அவசியம்.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள ஆண்கள் சூரிய நமஸ்காரம் செய்வதும்,ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் தினந்தோறும் படிப்பதும், குறைந்தபட்சமாக காலை, நடுப்பகல், மாலைப்பொழுதில் 108 அல்லது 1008 தடவை ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஷெபிப்பது, வியாழக்கிழமைகளில் திருக்கோயில் ஒன்றில் தீபம் ஏற்றுவது ஆகியவை நன்மை அளிக்கும்.

பெண்மணிகள், சுந்தரகாண்டம் பாராயணம், கந்தர்சஷ்டிக் கவசம், தன்வந்திரி ஸ்லோகம், அபிராமி அந்தாதி ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றைத் தினமும் படித்து வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை
2-ம் பாதம் வரை)

குடும்பம் : ஏழரைச் சனியில் முதல் பகுதியில் உள்ள கன்னி ராசி அன்பர்களுக்கு இதுவரை ராசிக்கு 4-ம் இடமாகிய தனுர் ராசியில் சஞ்சரித்து வந்த குரு தற்போது ராசிக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானமான மகரத்திற்கு மாறியிருப்பது நன்மை தரக்கூடிய கிரக அமைப்பாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். சென்ற ஓராண்டு காலமாக மனஅமைதியை பாதித்துவந்த குடும்பப் பிரச்சினைகள் இப்போது தீரும். பொருளாதார நிலை சீர்படும். கணவன்-மனைவியரிடையே ஏற்பட்டு வந்த கருத்து வேற்றுமைகள், பரஸ்பர சந்தேகம், தேவையற்ற மனக்குழப்பங்கள், நெருங்கிய உறவினர்களின் மறைமுகச் சூழ்ச்சிகள் ஆகியவை நீங்கிவிடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அபிவிருத்தி காண்பீர்கள். இதுவரை கட்டுக்கடங்காமல் இருந்த செலவினங்கள் இனி கட்டுப்படும். மகரத்தில் உலவிவரும் ராகுவினால் ஏற்பட்டுவந்த சிரமங்கள் இனி இராது. தசா, புக்திகள் அனுகூலமாக இருந்தால் திவ்ய தேச தரிசனம், அருளாளர்களின் ஆசி, கே்ஷத்திராடனம், புண்ணிய நதி ஸ்நான பாக்கியம் ஆகியவை கிட்டும்.

பொருளாதாரம் : எதிர்பாராத மிகப் பெரிய செலவுகளால் கலங்கியிருந்த உங்களுக்கு இந்த குருபகவானின் மகர ராசி மாறுதல் அதிக அளவில் உதவப் போகிறது என்பதை உறுதியாகக் கூறமுடியும். வீண் செலவுகள் குறையும்.

ஆரோக்கியம் : சிறுசிறு உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் அடுத்துவரும் ஓராண்டு காலத்திற்குக் கவலை தரும் அளவிற்கு உடல் பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மேலும் கூறவேண்டுமானால், ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும் எனக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நிரந்தர நோய்களுக்காக மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்குக்கூட இப்போது உபாதைகளின் கடுமை குறைவதைக் காணலாம்.

உத்தியோகம் : தொழில்காரகரான சனிபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொறுப்பும், வேலைப்பளுவும் பலமடங்கு அதிகரிக்கும். இருப்பினும் மனதில் உற்சாகத்திற்குக் குறைவிராது. ஒரு சிலருக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு. சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்துவரும் கன்னி ராசி அன்பர்களுக்கு அடுத்துவரும் மூன்று மாதங்களில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆர்வம் இருப்பின் அதற்கான முயற்சிகளை இப்போது மேற்கொள்ளலாம். ஏற்கெனவேயே வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் கன்னி ராசியினருக்கு நிறுவன மாற்றமும், அதனால் சில நன்மைகளும் ஏற்படுவதை அனுபவத்தில் பார்க்கலாம்.

தொழில் : தொழில்துறையினருக்கு குருபகவானின் மகர ராசி மாற்றம் மிகச் சிறந்த மாற்றமாகும். பொருளாதார நிலை சீர்படும். தொழில் அபிவிருத்தி அடையும். புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு தக்க தருணம் இது. புதிய தொழில்துறைகளில் நுழையவேண்டும் என்ற ஆர்வம்இருப்பின் அதற்கான சாத்தியக்கூறுகளை இப்போது ஆராயலாம். ஏனெனில், அதற்கான நிதிஉதவிகள் எளிதில் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நிதிநிறுவனங்கள் ஒத்துழைக்கும்.

வியாபாரம் : வியாபாரத்துறையினருக்கு குருபகவானின் மகர ராசி மாறுதலினால் பல நன்மைகள் கிடைக்கப்போவதைக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏழரைச் சனியின் பாதிப்பு அதிகமாக இராது. இதற்கு முக்கியக் காரணம், குருவின் மகர ராசி சஞ்சாரம், உங்கள் ராசிக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஏற்பட்டதுடன் உங்கள் ராசிக்கு குருபகவானின் சுபப்பார்வை கிடைப்பதுமாகும். `குரு பார்க்க கோடி தோஷம் விலகும்!' என்பது ஆன்றோர் அருளியுள்ள வாக்காகும். குருபகவானின் சுபப்பார்வையால் வரும் ஓராண்டிற்கு கன்னி ராசி வியாபாரிகள் குறைவில்லாத பல நன்மைகளை அடையப்போவதைக் கிரகநிலைகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சக கூட்டாளிகள், தொழிலாளர்கள் ஆகியோருடன் ஏற்பட்டுவந்த கருத்து வேற்றுமை, ஒற்றுமைக்குறைவு ஆகியவை நீங்கும்.

கலைத்துறையினர் : சிறந்த முன்னேற்றம் உங்களுக்கு வரும் ஓராண்டு காலத்திற்கு ஏற்படப் போவதை குருபகவானின் மகர ராசி மாறுதல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஏழரைச்சனியின் நிலையினால் அலைச்சலும் உழைப்பும் அதிகமிருந்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைப்பது நிச்சயம். புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். தயாரிப்பாளர்களுக்குச் சாதாரணப் படங்கள்கூட நல்ல லாபத்தைப் பெற்றுத்தரும். புதிதாகக் கலை உலகில் அடியெடுத்து வைக்க நினைக்கும் இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு வெற்றிப் பாதையை உறுதி செய்கிறது, குருபகவானின் மகரராசி மாறுதல். சிலருக்கு விவாக யோகமும் உண்டு.

அரசியல் துறையினர் : சம்பந்தப்பட்ட கிரகநிலைகள் அரசியல்துறையினருக்கு நன்மை தரும்படி அமைந்துள்ளன. குருபகவானின் மகர ராசி மாறுதல், மற்ற கிரகங்களினால் ஏற்படும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்படி அமைந்துள்ளது. சிலருக்குக் கட்சியில் முக்கியப் பதவி ஒன்று அளிக்கப்படக்கூடும். ஜெனனகால கிரகநிலைகள் மற்றும் தசா, புக்திகள் ஆகியவை சுபபலம் பெற்றிருப்பின் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கும், அம்முயற்சி அமோக வெற்றி பெறுவதற்கும் சிறந்த வாய்ப்புள்ளது.

மாணவமணிகள் : படிப்பில் வரும் ஓராண்டு காலத்திற்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனம் பாடங்களில் பதியும். ஞாபகத்திறன் கூடும். படிப்பில் மட்டுமா முன்னேற்றம்? விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றில்கூட அமோக வெற்றி பெற்று மிக எளிதில் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். இருப்பினும் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அடுத்த ஆண்டு கல்லூரி அட்மிஷனில் அதிகமாக கஷ்டப்படாமல் உங்கள்விருப்பப்படி இடம் கிடைக்கும்.

விவசாயத்துறையினர் : பயிர்கள் செழித்து வளரும். வருமானம் உயரும். வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருந்தாலும் அதற்கேற்ற வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்குப் புதிய நிலம், புதிய வீடு ஆகியவை வாங்கும் யோகமும் அமைந்துள்ளது.

பெண்மணிகள் : மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஓராண்டு உங்களுக்காகக் காத்துள்ளது. கவலைகள் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் பெருமிதம் அளிக்கும். கணவரின் அன்பிற்குக் குறைவில்லை. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்தால் போதும். மற்றபடி கன்னி ராசியில் பிறந்துள்ள சகோதரிகளுக்குக் கவலையில்லாத ஓராண்டு. தசா, புக்திகள் சிறந்த சுபபலம் பெற்றிருந்தால் மழலைப்பாக்கியம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

அறிவுரை

கன்னி ராசியினருக்கு இந்த குருபகவானின் இடப்பெயர்ச்சி மிகவும் நல்லது. சனிபகவானைத் தவிர மற்ற கிரகங்களும் நன்மை தரும்படியாகவே சஞ்சரிக்கின்றன. சனி மட்டும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் உபாதைகளும், அசதியும், சோர்வும், அடிக்கடி உற்சாகக் குறைவும், காரணமில்லாத மனச்சோர்வும் ஏற்படக்கூடும். எளிய பரிகாரத்தினால் சனிபகவானால் ஏற்படப்போகும் சிறு பிரச்சினைகள், ஆரோக்கியக் குறைவு, சில தருணங்களில் ஏற்படும் மனக்கலக்கம், குழப்பம் ஆகியவை கீழே கூறியுள்ள எளிய பரிகாரங்களால் குறைத்துக்கொள்வது மட்டுமல்ல முற்றிலும் தவிர்க்கவும் உதவும். வேண்டியது நம்பிக்கையும், சிரத்தையும் மட்டுமே.

பரிகாரம்

1. ஒருமுறை திருக்கொள்ளிக்காடு அல்லது திருநள்ளாறு அல்லது திருமோகூர் (ஸ்ரீ காளமேகப் பெருமாள்) சென்று முறையே நல்லெண்ணெய் மற்றும் பசு நெய்தீபம் ஏற்றி வைத்து தரிசித்துவிட்டு வரவும்.

2. சனிக்கிழமைகளில் மட்டும் ஒருபொழுது அல்லது பூரண உபவாசம் இருப்பது நல்லது. பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.

3. தினமும் உங்கள் கையினாலேயே மூன்று உருண்டை சாதத்தில் சிறிது எள் சேர்த்து காகத்திற்கு வைத்து வரவும்.

4. ஆசார அனுஷ்டானங்களில் சிறந்த முதியவர் ஒருவருக்கு வஸ்திரம், தீபம், சக்திக்கேற்ப தட்சணையை வெற்றிலைப்பாக்குப் பழத்துடன் சனிக்கிழமை அன்று நீராடியபின்பு கொடுத்து, நமஸ்கரித்து அவரது ஆசியைப் பெறவும். இந்த நான்கு பரிகாரங்களில் எவை முடிகிறதோ அவற்றை மட்டும் வசதிக்கேற்ப செய்தால் சனிபகவானின் ஏழரைச்சனி விளைவுகள் நீங்கும்.