Thursday, March 18, 2010

Sadhguru's Explanation to Spiritual Scandals

''மக்களை நல்வழிப்படுத்துவதாக வெளியில் காட்டிக்கொண்டு, அந்தரங்க லீலைகளில் ஆன்மிகக் குருமார்கள் ஈடுபடுவது சகஜமாகிவிட்டதே? அவர்களை நம்பி மக்கள் அலை மோதுவதும், அவர்களுடைய அசிங்கமான சுயரூபம் தெரிந்து மனம் குலைந்துபோவதும், ஆன்மிகத்தின் பேரிலேயே சந்தேகம்கொள்ளவைக்கிறதே?''

''ஆன்மிகப் பாதையில் நம்பிக்கை என்பது மிக மிக அவசியமானது. ஏனென்றால், ஆன்மிகப் பயணத்தில் முன்னேற வேண்டுமானால், அது முழுமையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே இயலும்.

ஆன்மிகத்தைப் பரப்ப நினைப்பவர்களின் வாழ்க்கைமுறை தூய்மையானதாக, சந்தே கத்துக்கு இடமற்றதாக, பூரண அர்ப்பணிப்புகொண்டதாக இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில், ஆன்மிகத்தில் இருப்பவர்களைப் பார்த்தாலே ஒருவித போற்றுதலும், மரியாதையும் மக்களிடத்தில் தோன்றியது. இன்றைக்கோ, ஆன்மிகப் பணியில் இருப்பவர்களைப்பற்றித் துப்பறிந்து ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. ஆன்மிகத்தின் பெயரால் மக்களைச் சென்று அடைபவர்கள் சிலரின் பொறுப்பற்ற செயல்களால்தான் இந்தத் துரதிர்ஷ்டமான சூழல் உருவாகிவிட்டது.


மத போதகர்கள் எதிர்ப்பு இல்லாத குழந்தைகளைத் தங்கள் விருப்பப்படி வக்கிரமான விஷயங்களுக்குப் பயன்படுத்துவது உலகெங்கும் காணப்படுகிறது. மதத் தலைவர்கள் தங்கள் சுயலாபத்துக்காகப் பெண்களையும், ஆண்களையும் உடல்ரீதியாகவோ, பொருள்ரீதியாகவோ பயன்படுத்திக்கொள்வதும் மிக சகஜமாகிவிட்டது.

ஆன்மிகத் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிற சிலரால், ஆன்மிக வளர்ச்சி என்பதே எட்டாக் கனவாகி விடும் அபாயம் இருக்கிறது.

வேறெங்கும் காண முடியாத அளவில், நம் தேசத்தில்தான் மனிதனின் உளவளர்ச்சி பற்றிய சிந்தனையும் விழிப்பு உணர்வும் மேலோங்கி இருந்தன. ஆன்மிக வளர்ச்சியின் ஆழத்தையும் வீச்சையும் முழுமையாக உலகுக்கு வழங்கவல்ல கலாசாரம் இதுபோல் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நீங்கள் காண இயலாது.

யோக பாரம்பரியம் 'ஸ்வேதகேது' என்ற மாணவனைப்பற்றி மிகப் பெருமையுடன் குறிப்பிடுகிறது.

ஸ்வேதகேது தன்னுடைய 12-வது வயதில் ஒரு குருவிடம் அனுப்பப்பட்டான். வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரங்கள் முதலியவற்றை அவன் முழுமையாகக் கற்றுக்கொண்டான். வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கையாளப்போதுமானவற்றை அவன் கற்றுக்கொண்டதாகச் சொல்லி, குரு வழியனுப்பிவைத்தார்.

ஸ்வேதகேது வீடு திரும்பினான். அவனைப் பார்த்ததும், 'இப்படி முட்டாளாகத் திரும்பி வந்திருக்கிறாயே?' என்று அவனுடைய தந்தை முகம் சுழித்தார். ஸ்வேதகேது அதிர்ந்தான். 'இல்லை, அப்பா. கற்கக்கூடியது அனைத்தையும் கற்றுவிட்டதாக குரு சொன்னாரே.'

'சொல்லித் தரக்கூடியது எல்லாவற்றையும் நீ கற்றறிந்துவிட்டாய். மறுக்கவில்லை. ஆனால், உனக்குள் இருக்கும் ஞானத்தின் மூலத்தை நீ அறியவில்லை என்பது உன் நடையைப் பார்த்தாலே புலப்படுகிறது' என்றார் அவன் தந்தை.

ஸ்வேதகேது கோபம்கொள்ளவில்லை. குருவிடம் திரும்பப் போனான். தந்தை சொன்னதைச் சொன்னான்.

'ஓ, அதை அறிய வேண்டுமா? ஆசிரமத்தில் இருக்கும் இந்த 400 மாடுகளைக் காட்டுக்குள் ஓட்டிப் போ. அவை பெருகி ஆயிரமானதும், திரும்பி வா. அதுவரை வேறு எதைப்பற்றியும் கவலைப்படாதே' என்றார் குரு.

'என்னது... முற்றும் படித்தவனை மாடு மேய்க்கச் சொல்கிறீர்களா?' என்று ஸ்வேதகேது ஆத்திரப்படவில்லை. குருவின் சொல்லைத் தட்டாமல், அங்கிருந்த மாடுகளைக் காட்டுக்குள் ஓட்டிப்போனான்.

மாடுகளைப் பராமரிப்பதைத் தவிர வேறு எதிலும் அவன் சிந்தனை போகாமல் இருக்கச் சில மாதங்கள் ஆயின. பசித்தால் சாப்பிடுவான். மற்ற நேரம் அமைதியாக அமர்ந்து இருப்பான். ஒரு கட்டத்தில், மாடுகள், அவற்றின் பராமரிப்பு இவைபற்றிய சிந்தனைகளும் அற்றுப்போயின. பசுவுடன் இருந்தால் பசுபோல் இருந்தான். மரத்தின் அருகில் இருந்தால், மரத்துடன் ஐக்கியமானவனாக உணர்ந்தான்.

அவன் கற்றறிந்த வேதங்கள், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரங்கள் எல்லாவற்றையும் மனம் மறந்தது. மொழி, எண்ணிக்கை எல்லாவற்றையும் கடந்த நிலையில் அவன் வாழ்ந்து வந்தான். பசுக்களுடன் புழங்கிப் புழங்கி அவற்றின் மொழிகூட அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. அவனுடைய கண்கள்கூட உருமாறி பசுக்களின் கண்களைப்போல் ஆகிவிட்டன.

சில ஆண்டுகள் ஆயின. ஒரு பசு அவன் முன் வந்து நின்றது.

'ஸ்வேதகேது, உன் குருவிடம் நீ திரும்பிப் போகும் நேரம் வந்துவிட்டது' என்றது.

ஸ்வேதகேது அப்போதும் எதுவும்சொல்ல வில்லை. மாடுகளுடன் அவை போனதிசையில் நடந்தான். அவை ஆசிரமத்தில் போய் நின்றன. அங்கு இருந்த சீடர்கள் ஆவலுடன் மாடுகளை எண்ணினர்.

'குருவே, எண்ணிக்கை சரியாக ஆயிரத்தை எட்டிவிட்டது' என்றனர்.

'இல்லை. ஆயிரத்தொன்று' என்று திருத்தினார் குரு. 'ஸ்வேதகேதுவும் இப்போது பசுக்களுடன் ஒன்றி ஒரு பசு போல் ஆகிவிட்டான். அவனுடைய அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, உயிரின் இருப்பாக முழுமையாக மாறிவிட்டான். இதுதான் ஞானத்தின் உன்னத நிலை' என்று நெகிழ்ந்தார் குரு.

படிப்பு அறிவில் மிகத் தேர்ந்தவனாக இருந்த ஓர் அறிஞன்கூடத் தன் குரு சொன்னதற்காக, மாடுகளை மேய்க்கப் போனான். அது அவனை இன்னமும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்பதற்காக சொல்லப்படும் நிகழ்வு இது.

ஆன்மிகத்தின் அடிப்படையே முழுமையான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்தான். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம். நல்வாய்ப்பும் ஆழ்ந்த ஞானமும்கொண்ட இந்தத் தேசத்தில் சில பொறுப்பற்ற மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் மக்களின் நம்பிக்கை குலைந்து சிதறிவிடுகிறது.

அதே சமயம், ஏதோ ஒன்றிரண்டு பேர் தவறான முன்னுதாரணங்களாகத் திகழ்வதைக் கண்டு, மொத்த ஆன்மிகத்தையும் சந்தேகப்பட வேண்டிய அவசியம்இல்லை. ஆன்மிகத்தின் பெயரால் செயல்படுகிற எந்த மனிதரையும், எந்தக் குழுவையும் தனிப்பட்ட முறையில் சீர்தூக்கிப் பார்த்து, அந்த நபர் மீதும், அந்தக் குழுவின் மீதும் நம்பிக்கைவைக்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய் வதே சரி.

ஒரு கூடை நிறைய மாம்பழங்கள் இருக்கையில், அதில் ஒன்று அழுகி இருந்தால், கூடையையே உதாசீனம் செய்யத் தேவை இல்லை. அழுகிய பழம் மற்ற பழங்களைப் பாதித்துவிடுவதற்கு முன்பாக, அதை உடனே அகற்றி வீசினால்போதும்.

இந்தப் பூமியில், வெகு மகத்தான அம்சங்களைச் சமூகத்துக்கு வழங்கிய ஆன்மிகத் தலைவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். சில தவறான நபர்களால், அவர்களுடைய அற்புதமான பணிகள் விரயமாகிவிடக் கூடாது.

எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும், மனிதன் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். மருத்துவத் துறையிலும் ஆன்மிகப் பாதையிலும் இருப்பவர்கள் இன்னமும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் மருத்துவரிடம் தங்கள் உயிரையும், ஆன் மிகத் தலைவர்களிடம் தங்கள் நம்பிக்கையையும் முழுமையாக ஒப்படைக்கிறார்கள்.

மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் பூரணமாக அனுபவிக்கும் ஆன்மிகத் தலைவர்கள், வாழ்க்கையில் மிகத் தூய்மையானவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆன்மிகரீதியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டுமானால், மக்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையை எந்தக் காரணம்கொண்டும் தவறாகப் பயன்படுத்த முனையாத நேர்மை தேவை.

ஆன்மிக வளர்ச்சிக்கு மூடத்தனமான பக்தியோ, குருட்டுத்தனமான நம்பிக்கையோ அவசியம் இல்லை. மாறா அன்பும் நீண்ட கால அர்ப்பணிப்பும் மட்டுமே ஆன்மிக வளர்ச்சிக்கு அடிப்படை. இது குறித்து நான் மிகத் தீவிரமான கவனத்துடன் இருக்கிறேன்.

ஆன்மிகம் என்பது அருவருப்பான ஆபாசங்களுக்கு அடித்தளமாகிவிடாமல்; அன்பு, கருணை, ஆனந்தம், பரவசம் இவற்றைப் பரப்ப வேண்டும் என்பதே என் விருப்பம்!''

-சரிசெய்வோம்...

சத்குருவின் 'ஜென்'னல்!

ஜென் குருவிடம் பெண் சீடர் ஒரு புத்தகத்தின் பக்கத்தைத் திறந்துகாட்டினாள். ''பல வருடங்களாகப் படித்தும் நிர்வாணா குறித்த இந்தச் சூத்திரங்கள் எனக்குப் புரியவில்லை. அவற்றுக்கு விளக்கம் அளிப்பீர்களா?''

குரு சொன்னார்: ''எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சூத்திரத்தைப் படி. உதவ முடிகிறதா என்று பார்க்கிறேன்.''

பெண் சீடர் அதிர்ந்தாள். ''எழுதப் படிக்கத் தெரியாதவரால் அர்த்தத்தை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? இதை அறியாமல், நீங்கள் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுகிறார்களே!'' என்றாள் அவள்.

குரு நிலவைச் சுட்டிக்காட்டினார். ''இந்த விரல் இல்லைஎன்றாலும் அந்த நிலவை நீ பார்க்க முடியும் அல்லவா?''

சத்குருவின் விளக்கம்:

நிர்வாணா என்பதும் முக்தி என்பதும் எல்லாவற்றையும் கடந்துவிட்ட ஒன்றுமற்ற நிலை.

ஏதோ ஒன்று இருக்கிறது என்றால், அதை விளக்கப் படிப்பு தேவைப்படலாம். எது இல்லாததோ, எது படைத்தலைத் தாண்டி இருக்கிற தன்மையோ, அந்த ஒன்றுமற்ற தன்மையைப் புரிந்துகொள்ள, பெரிய படிப்பு எதற்கு? கண்களை மூடி அமைதியாக இருந்தாலே புரிந்துகொள்ளக் கூடியது அது. அதற்கு எழுத்தும் படிப்பும் வேண்டாம். உயிர்பற்றிய உணர்வு போதும்.

சூத்திரம் என்று சில வார்த்தை அமைப்புகளில் சிக்கி விட்டால், வெளியே வர முடியாமல் போகலாம். எழுதியதைப் படித்து மனதில் நூறு அர்த்தங்கள் பண்ணிக்கொள்ளலாம். ஆனால், அதில் எதுவும் சரியாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.

உயிரையும், அதன் மூலத்தையும் புரிந்துகொண்டவருக்கு எழுத்தும், படிப்பும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே வருவது இல்லை. எழுதப் படிக்கத் தெரியாத போதும், அந்த குரு உயிரின் மூலத்துடன் தொடர்பு வைத்திருப்பதால்தான், ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது எதுவோ, அதை அவர் புரிந்துகொண்டுவிட்டபின், எழுதப் படிக்கத் தெரிந்தாலும் ஒன்றுதான், தெரியாவிட்டாலும் ஒன்றுதான்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

. எழுதியதைப் படித்து மனதில் நூறு அர்த்தங்கள் பண்ணிக்கொள்ளலாம். ஆனால், அதில் எதுவும் சரியாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது.


அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

عالم الرفهيه said...

شركة امست لمكافحة الحشرات
شركة رش مبيدات بالدمام وبالخبر